தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்


தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார், சமீபத்தில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர், சென்னையிலுள்ள காவல் நவீனமய கணினி பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறையின் உளவுத்துறை துணை கமிஷனர்களான திருநாவுக்கரசு, சுதாகர் முறையே, காவல்துறையின் சட்டம் ஒழுங்கு உதவி ஐ.ஜி., மற்றும் உயர்நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவின் உதவி ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளனர். தலைமையிட துணை கமிஷனராக இருந்த விமலா, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த ராஜன், சென்னை கோட்டம் ரயில்வே எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட எஸ்.பி.,யாக பர்வேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.