மயிலாடுதுறை அருகே 42 ஆண்டுகளுக்கு முன் திருட்டுப்போன ராமர் உள்பட 3 சிலைகள் இங்கிலாந்தில் இருந்து மீட்பு


மயிலாடுதுறை , பொறையார் அனந்தமங்களம் கோயிலில் கடந்த 1978ம் ஆண்டு ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய 3 சிலைகள் திருடப்பட்டு அதற்கு பதிலாக போலி சிலைகள் கோயிலில் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சிலைகள் அனைத்தும் வெளிநாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டதும் தெரியவந்தது. இந்த வகை சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புடையதாகும். இதுதொடர்பான வழக்கில், காவல்துறையினர் 4 பேரை கைது செய்தனர்.இந்நிலையில், தமிழக சிலை மீட்பு குழுவினர் தொடர்ச்சியாக எடுத்த நடவடிக்கையின் காரணமாக இங்கிலாந்தில் இருந்த மேற்கண்ட 3 சிலைகள் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, இந்திய தூதரக உதவியுடன் இங்கிலாந்தில் இருந்து அந்த சிலைகள் பாதுகாப்பாக நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டன. ஏறத்தாழ 42 ஆண்டுகளுக்குப் பிறகு திருடுபோன தமிழக சிலைகளை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங்கிடம், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் ஒப்படைத்தார்.
இதுகுறித்து, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கூறும்போது, “கடத்தப்பட்ட 4 சிலைகளில் தற்போது 3 மீட்கப்பட்டுள்ளது. அனுமன் சிலை என்பது சிங்கப்பூரில் உள்ளது. குறிப்பாக 300க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் வழக்கு தமிழகத்தில் உள்ளது. அதில் தற்போது 10 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிதாக சிலை கடத்தல் வழக்குகள் தமிழகத்தில் இல்லை. இன்னும் நமது மாநில சிலைகள் நியூயார்க் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ளன. அதை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து கடத்தப்பட்ட துவரபாலகா கற்சிலையும் தற்போது மீட்கப்பட்டுள்ளது. அதுவும் விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும். இதில் பல வழக்குகள் ஆதாரம் இல்லாமல் முடித்து வைக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கும்போது அதுகுறித்தும் விசாரிக்கப்படும்’ என்றார். இதையடுத்து மேற்கண்ட 3 சிலைகளும் இன்று தமிழகம் வந்தடையும்.
சிலைகள் மீட்பு தொடர்பாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் நிருபர்களிடம் கூறும்போது, “இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல்வேறு சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014க்கு பின்னர் தற்போது வரை 40 சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 1978ல் கடத்தப்பட்டு தற்போது வந்துள்ள சிலைகள் பல்வேறு கடும் போராட்டத்திற்கு பின்னரே கொண்டு வரப்பட்டுள்ளன. முதலில் இந்த சிலைகளை மீட்டு கொண்டு வர சில சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது. வரும் காலங்களில் இதுபோன்று சிலை திருட்டுகள் நடக்காமல் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.