மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் மாணிக்கம் – கோமல் அன்பரசன்!

Share this

மழையோ, வெயிலோ, குளிரோ எதையும் பார்ப்பதில்லை. சுற்றிக்கொண்டே இருக்கும் அந்த புல்லட். எம்.டி.ஓ. 7905 என்ற அதன் பதிவெண்ணும், பட,படவென அது வரும் சத்தமும், ஒவ்வொரு எல்லைக்குள்ளும் நுழைவதற்கு முன்பே அது எழுப்பும் தனியான ஹாரன் ஒலியும் எல்லா ஊர்களுக்கும் பரிச்சயம், அதனை ஓட்டுபவர் எத்தனை வேகத்தில் போனாலும் கடந்து செல்கிற அத்தனை பேரின் வணக்கங்களையும், கையசைப்புகளையும் தலையாட்டி ஏற்றுக்கொண்டே நகருவது கம்பீர அழகு. நிறைய இடங்களில் வேகம் குறைத்து நலம் விசாரிப்புகளைச் செய்வார்.

பல நேரங்களில் எதிர்வருபவர்கள் அந்த வண்டியைக் கை காட்டி நிறுத்துவார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் ஓட்டிச் சென்று ‘டபரா செட்’டில் அன்பொழுக தேநீரை வாங்கி வந்து கொடுப்பார்கள்.

எந்தக் காரணமும் இல்லாமல் இப்படி ப்ரியமாக டீ வாங்கிக் கொடுப்பதற்காக, குறைகளைச் சொல்வதற்காக, உதவி கேட்பதற்காக, மனு கொடுப்பதற்காக என்று யார் நிறுத்தினாலும் அந்த வண்டி நிற்கும். சொல்வது யாராக இருந்தாலும் காது கொடுத்து கேட்கப்படுவதும், பொறுமையாக பதில் சொல்வதும் வெகு இயல்பாக அங்கே நிகழும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி புல்லட்டில் சுற்றி வந்தவர் ஒரு எம்.எல்.ஏ. அதுவும், ஒரே தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றவர்.

இதனைப் படிக்கும் போதே விழிகள் விரிகிறதல்லவா?! காரணம், இப்போதெல்லாம் அரசியல் பற்றிய மதிப்பீடுகள் மாறிப்போய் கிடக்கின்றன. எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் போன்ற பதவிகளில் இருப்பவர்களை மக்கள் பார்க்கிற விதமே வேறு என்றாகி இருக்கிறது. ஒரு துளியும் மிகையில்லாத இந்த உண்மையை, இப்படியெல்லாம் ஓர் ஏம்.எல்.ஏ எப்படி இருந்திருக்க முடியும் என்று அடுத்தத் தலைமுறை நம்பாமல் கேட்பதைக் குற்றம் சொல்வதற்கில்லை. ஏனெனில், எம்.எல்.ஏ போன்றவர்கள் ஊருக்கு வருவதையே திருவிழா போல ஆக்கிவைத்திருக்கும் காலத்தில் அல்லவா வாழ்கிறோம் நாம். அரசியலைத் தூய்மை படுத்தியே ஆக வேண்டிய இந்த இக்கட்டான நேரத்தில், மாற்று அரசியலைப், பற்றி பேசும் போதும், பழையபடி மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை சொல்லும் போதும் குறிப்பிட்ட சிலரின் உருவம் நம்முடைய மனக்கண்களில் வந்து நிற்கும். அவர்களில் காலம் மறைக்கவோ மறுக்கவோ முடியாத மக்கள் பிரதிநிதி இரா.ராஜமாணிக்கம்.

தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட பழைய குத்தாலம் சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக அவர் பணியாற்றிய காலம் தூய்மை அரசியலின் பொற்காலம். குறைந்த பட்சம் 10 நாட்களுக்கு ஒரு முறையாவது தொகுதியில் இருக்கிற அத்தனை பெரிய ஊர்களுக்கும் சத்தமில்லாமல் சென்று கடைகோடி தொண்டனையும், கட்சி எதையும் சார்ந்திராத சாதாரண வாக்காளனையும் ஒரு சக தோழனைப் போல அவர் சந்திப்பார். அவர்களின் இன்ப, துன்பங்களில் முதல் ஆளாக பங்கெடுத்து ஓர் உறவைப் போல உணர்வைப் பகிர்வார்.

ஒவ்வொரு ஊரிலும் அவர் மக்களைச் சந்திப்பதற்கும், கட்சிக்காரர்களுடன் பேசுவதற்கும் ஓரிடம் இருக்கும். திராவிட இயக்கத்தை வளர்த்த தொட்டில்களாக ஆரம்ப காலத்தில் இருந்தவை லாட பட்டறைகள். அதற்குப் பிறகு சைக்கிள் கம்பெனிகள், சலூன் கடைகள். பிற்காலத்தில் டீக்கடைகள். அரை நூறுக்கும் அதிகமாக வெளிவந்த பத்திரிகைகளைப் படித்தும், படித்தவற்றைப் பற்றி காரசாரமாக விவாதித்தும் கொள்கை அரசியலை உயிர்ப்போடு வைத்திருந்த தலங்கள் இவைதான். சாமானியர்களின் அரசியலைப்பற்றி சாமானியர்களே பேசித் தீர்த்த சாமான்யர்களின் இடங்கள். இவற்றில் ஏதோ ஒன்றில்தான் ராஜமாணிக்கம் அவர்களின் சந்திப்புப்புள்ளி இருக்கும். அப்படி ஓர் இடமான என் தந்தையின் ஆர்.கே.சைக்கிள் கம்பெனியில் அவர் உட்கார்ந்து பேசிய அரசியலை, அதில் இம்மியளவு பிசகாது எப்போதும் இழையோடிக்கொண்டிருந்த மக்கள் மீதான அன்பைப் பலமுறை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.

அதிரி, புதிரியாக அடுத்தவர்களை எடுத்தெறிந்து அவர் எப்போதும் பேசியதில்லை. மாறாக அனுபவ ஆற்றலும், அனைவரையும் அரவணைத்து அன்பால் கட்டிப்போடும் சக்தியும் அவரது வார்த்தைகளில் மிளிரும். சொந்தக் கட்சியினர் மீது பாசம் வைத்திருந்தார். மாற்றுக் கட்சியினரை மதித்தார். எல்லா கட்சியினரும் கொண்டாடும் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். அது அவ்வளவு எளிதானதல்ல. அரசியல் என்பது அந்தளவுக்கு வெறுப்பும், சூழ்ச்சியும் அசந்தால் அடித்து வீழ்த்திவிடும் ஆபத்தும் நிறைந்தது. அரிதிலும் அரிதான தன்னுடைய குணநலன்களால் அரசியலிலும் அன்பாலான ராஜாங்கத்தைச் சாத்தியமாகிக் காட்டியவர் ராஜமாணிக்கம்.

எம்.எல்.ஏ வாக அவர் ஆற்றிய பணிகள் கொஞ்ச, நஞ்சமல்ல. பழையகூடலூர் என்ற கிராமத்து ஊராட்சியின் தலைவராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து, அதிலே தொடர்ந்து பல்லாண்டுகள் இருந்தவர் என்பதால் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலே வல்லவராக இருந்தார். வரப்புகளில் நடந்து போக மட்டுமே வழி இருந்த ஊர்களுக்கெல்லாம் சாலைகளைக் கொண்டு வந்தார். தண்ணீர் வரும் போதெல்லாம் அடித்து செல்லப்படும் மரப்பாலங்கள் காங்கிரீட் பாலங்கள் ஆயின. மரத்தடி பள்ளிக்கூடங்கள் கட்டிடங்களுக்கு மாறின. குத்தாலம் தொகுதியில் இன்றைக்கு இருக்கிறவற்றில் பாதிக்கு மேலான பாலங்கள், இவர் சட்டமன்றத்தில் பேசிப்பேசி, அமைச்சர்களிடம் நடையாய் நடந்து கொண்டு வந்தவைதான். தொகுதியில் ஓடுகிற ஆறுகள், பாசன வாய்க்கால்கள், வடிகால்கள், மதகுகள் அத்தனையையும் விரல் நுனியில் வைத்திருந்தவர். ஒரு துண்டு சீட்டு கூட இல்லாமல் மேடைகளில் அவற்றைப் பற்றி மணிக்கணக்கில் அவர் பேசிய காட்சிகளை மனக்கண்ணில் ஓட்டிப்பார்க்கும் போது, எழுதி வைத்திருப்பதைக் கூட ஒழுங்காக படிக்கத் தடுமாறும் இன்றைய அரசியல்வாதிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மண்ணையும், மக்களையும் மனப்பூர்வமாக நேசித்து பதவியைப் பெரும் பொறுப்பாக நினைத்ததால்தான் அவர்களால் அந்தளவுக்கு உணர்வோடு ஒன்றி பேசவும், செயல்படவும் முடிந்தது.

தொடக்கக் காலங்களில் சைக்கிளில் சென்று மக்களைப் பார்த்தார். அதன்பிறகு தொண்டர்கள் வசூலித்து வாங்கிக்கொடுத்த மோட்டார் சைக்கிளில் பயணம். எப்போதும் தொண்டர்களையும் மக்களையும் இப்படி பார்த்துக் கொண்டே இருந்தாலும் கூட தேர்தல் என்று வந்துவிட்டால் கால்கள் தேயத்தேய ஒவ்வொரு வீட்டிற்கும் நடந்தே சென்று வாக்கு கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். குடியரசு தேசத்தில் வாக்காளனுக்கு அவர் கொடுத்த ஆகப் பெரும் மரியாதை அது. அதற்கு, ‘நீங்க வந்து ஓட்டு கேட்கணுமா… உங்களுக்குப் போடாமல் யாருக்குப் போடப்போகிறோம்’ என்று அவர்களும் வாஞ்சையோடு சொல்லி அனுப்புவார்கள்.

அத்தனை முறை எம்.எல்.ஏவாக இருந்தாலும் அடிப்படையில் ஒரு விவசாயியாக இருந்தார். அதைக் கொண்டு பிள்ளைகளைப் பெயர் சொல்லும் அளவுக்கு ஆளாக்கினார். வெறும் வசனத்திற்காக எத்தனையோ பேருக்குச் சொல்லப்பட்ட ‘கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்’ என்ற வார்த்தைகள் ராஜமாணிக்கம் அவர்களுக்கே கனகச்சிதமாக பொருந்தின.

அரசியல் எதிரிகளாலும் சுண்டுவிரலைக் காட்டிக் கூட அவர் மீது குற்றஞ்சொல்ல முடிந்ததில்லை. அப்படியோர் அப்பழுக்கில்லாத வாழ்க்கை அவருடையது. அரசியலில், அதுவும் தேர்தல் களத்தில் வென்றுக் கொண்டே மழையைப் போல தூய்மையாக மக்கள் மனங்களில் நிற்கிற பேரு வாய்த்தவர். எத்தனையோ எம்.எல்.ஏ., எம்.பிகள் வரலாம்; போகலாம். அவர்களெல்லாம் ராஜமாணிக்கம் ஆகிட முடியாது. அத்தகைய மாணிக்கங்கள் காலத்தின் கொடை. தவமேதும் செய்யாமல் மக்களுக்கு கிடைத்த வரம்.

கட்டுரையாளர் : கோமல் அன்பரசன்

தொகுப்பு : குணசீலன் – 8608508353
நன்றி : காவிரிக்கதிர்

Leave your comment
Comment
Name
Email