ஏன் இந்த மாயூர யுத்தம்

Share this

ஊர் என்பது வெறுமனே பெயர் மட்டுமல்ல; கலாச்சாரமோ, பண்பாடோ  மட்டுமே ஊர் அல்ல; கட்டிடத்தையோ, பெயர்ப் பலகையையோ  ஊர் என்று சொல்லிவிட முடியாது. மனிதர்களைப் போல, மண்ணைப்போல ஊருக்கும் உயிர் இருக்கிறது. ஊருக்கு என்று தனி வாசனை இருக்கிறது. வரைபடத்திலே இல்லாத ஊருக்கும் கூட தேடிப்பார்த்தால் ஏதாவது ஒரு சிறப்பு கிடைக்கும். அப்படி என்றால்               5 ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டிய  வரலாறு கொண்ட மயிலாடுதுறைக்கும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களுக்கும் எவ்வளவு சிறப்புகள் இருக்கின்றன? ஆந்திராவையும் சேர்த்து அகன்ற மெட்ராஸ் மாகாணமாக இருந்த காலத்திலேயே தனிப்பெரும் நகரமாக திகழ்ந்த மாயூரம் ஏன் இப்படி தேய்ந்து கிடக்கிறது ?

எல்லா தகுதிகளையும், எல்லா சிறப்புகளையும் கொண்டிருந்தும் மயிலாடுதுறை தொடர்ந்து வஞ்சிக்கப்படுவது ஏன்? அரை நூற்றாண்டுக்கு முன்பு வளர்ச்சி நின்று போன நம்முடைய ஊரில், ‘நல்லது நடந்துவிடாதா’ என்ற ஏக்கம் நமக்குள் வந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?  யாராவது வந்து எதாவது செய்துவிட மாட்டார்களா என எத்தனை முறை ஏங்கியிருக்கிறோம்?  ஆனால், கிடைத்ததெல்லாம் என்ன?  ஏமாற்றம் மட்டும் தானே! மாவட்டத் தலைநகர் ஆவதில் இருமுறை இழைக்கப்பட்ட அநீதியில் ஆரம்பித்து கேவலம் ஒரு பேருந்து நிலையம் நம்முடைய ஊருக்கு கொண்டு வரப்படாதது வரை எத்தனை எத்தனை புறக்கணிப்புகள்!

நாம் வாழும், நம்மை வாழவைக்கும் ஊரின் இந்த நிலையை எண்ணி நமக்கெல்லாம் கோபமும் கொதிப்பும் வரவேண்டுமா? இல்லையா? உங்களுக்கும்  எனக்கும் இருக்கிற அந்த உணர்வுகளின் வெளிப்பாடுதான் “மாயூர யுத்தம்” !

Invitation-2
‘காவிரிக்கதிர்’ இதழில் இதனைத் தொடராக  எழுதத்தொடங்கிய போது கிடைத்த  எனக்குக் கிடைத்த ஆதரவுக்கரங்கள் ஏராளம்.  உள்ளூரில் மட்டுமின்றி, வெளியூரிலும், வெளிநாடுகளிலும் இருக்கிற நம்ம ஊர்க்காரர்கள் தொடர்புகொண்டு ஆதங்கத்தோடு பேசும் போது எனக்குள் நம்முடைய ஊர் பொலிவு பெறும் என்ற நம்பிக்கை பிறக்கும். இவையெல்லாம் சேர்ந்துதான் இன்றைக்கு மாயூர யுத்தத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறது. நல்ல எண்ணங்களுக்கு எப்போதுமே வலிமை அதிகம். அதிலும் ஒருவன் நினைப்பது போலவே நூறு பேர், ஆயிரம் பேர், லட்சம் பேர் நினைக்கத் தொடங்கிவிட்டால் அந்த எண்ணம் நிச்சயம் கைகூடும். நம்மவர்கள்  ஒவ்வொருவரும், ‘நம்முடைய ஊர் மகத்தான நிலையை எட்ட வேண்டும்’ என்று மனதார நினைத்துவிட்டால் எந்த சக்தியாலும் அதனைத் தடுக்க முடியாது. அப்படி ஒவ்வொருவரையும் நினைக்க வைத்து, அதன் வழியாக ஊருக்கு நல்லது நடக்கச் செய்யும் முயற்சியே “மாயூர யுத்தம்”!

வெறுமனே பழம்பெருமை பேசுவதோடும், குறைகளைச் சொல்வதோடும் மாயூர யுத்தம் நின்றுவிடக்கூடாது என்பது என் எண்ணம். மயிலாடுதுறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களுக்குத் தேவையான தொலைநோக்கு செயல்திட்டமாக, நிறைவேற்ற  வேண்டியவை பற்றிய ஆவணமாக  இருக்க வேண்டும். அப்படி நினைத்துதான் மாயூர யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறோம். அந்த வகையில் மயிலாடுதுறையைப் பற்றிய என் கனவுகள் ஏராளம்.

அடுத்த சுதந்திர தினத்திலேயே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றுவது என்னுடைய பெருங்கனவு. அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறையில் காலத்திற்கேற்ற அதிநவீன பேருந்து நிலையத்தையும், பெயருக்கென்று உள்ள ஜங்ஷனில் அத்தனை வசதிகளையும் உருவாக்க வேண்டுமென கனவு காண்கிறேன்.  மயிலாடுதுறை பகுதியிலிருந்து வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்குச்செல்வது நிற்கும் அளவுக்கு இங்கேயே வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும் என கனவு காண்கிறேன். ஊர் முன்னேற இங்கேயுள்ள ஒவ்வொரு இளைஞனும், ஒவ்வொரு குடும்பமும், உங்கள் வீடும் முன்னேற வேண்டும் என கனவு காணுகிறேன்.  தொழில்கள் பெருகி மிகப்பெரிய தொழில் நகரமாக உருவெடுக்கவேண்டும் என கனவு காண்கிறேன். வெளியூர், வெளிநாட்டு தொழிலதிபர்களும், சுற்றுலாப் பயணிகளும் மயிலாடுதுறை விமான நிலையத்தில் வரிசை கட்டி நிற்கிற காட்சியை மனக்கண்ணில் நினைத்துப் பார்க்கிறேன்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகி, விவசாயம் செழிக்கும் பகுதியாக மாற்றப்பட வேண்டும் என்று கனவு காண்கிறேன். விவசாயிகள்  முகத்தில் மகிழ்ச்சி பொங்க மயிலாடுதுறையிலும் சுற்றியிருக்கிற ஊர்களிலும் நடமாட வேண்டுமென ஆசைப்படுகிறேன். தமிழை வளர்ப்பதில், கலைகளைப் போற்றுவதில், முன்னோர்களையும் அறிஞர்களையும் கொண்டாடுவதில், ஆன்மீகம் தழைப்பதில் தமிழகத்திலேயே மயிலாடுதுறை முதலிடத்தில் நிற்க வேண்டும் என கனவு காணுகிறேன். அப்துல் கலாம் சொன்னதைப் போல இவையெல்லாம்  தூங்கும்போது வரும் கனவுகள் அல்ல. தூங்க விடாமல் செய்யும் கனவுகள். எனக்கு மட்டுமானதல்ல; இனி இவையெல்லாம் உங்களுக்கானதும் தான்!

ஏனெனில் இந்த மண் , நமக்கு உயிர் தந்தது. உணர்வு கொடுத்தது. அறிவு தந்தது. அதனைச் செயல்படுத்தும் ஆற்றல் அளித்தது. எனவே, மயிலாடுதுறை எனும் இந்த மகத்தான பூமியை மீண்டும் பெருமைமிக்கதாக மாற்ற வேண்டும்.  இது எனக்கு மட்டுமான கடமை மட்டுமல்ல; உங்களுக்கானதும் கூட ! வாருங்கள்…. நாம் ஒன்று சேர்ந்து ‘மாயூர யுத்தம்’ நடத்தி, நமது காலத்திலேயே மயிலாடுதுறையைத் தூக்கி நிறுத்துவோம்!

பேரன்புடன்….

கோமல் அன்பரசன்

Leave your comment
Comment
Name
Email