வேண்டும் வேண்டும் மயிலாடுதுறை மாவட்டம் வேண்டும்!

Share this

மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் இளைஞர்களின் பயணம்!

ஏக்கம்,கோபம், ஆதங்கம், முயன்றால் முடிந்தே தீரும் என்ற நம்பிக்கை என நீறு பூத்த நெருப்பாக ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்து கிடக்கும் கலவையான உணர்வுகளை இந்தப் பயணத்தின் வழி நெடுக பார்க்க முடிந்தது. ஆமாம்… “மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்” என்ற முழக்கத்துடன் காவிரி அமைப்பினர் மேற்கொண்ட பரப்புரை பயணம் மயிலாடுதுறை கோட்டப்பகுதியில் உணர்வலைகளைத் தட்டி எழுப்பிவிட்டிருக்கிறது என்பதை பல இடங்களில் கண்கூடாக பார்க்க முடிந்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என எல்லாத் தரப்பினரும் ஒவ்வோர் ஊரிலும் காட்டிய ஆர்வமும், அங்கங்கே அவர்களும் இந்தப் பயணத்தின் அங்கமாக தங்களை மாற்றிக்கொண்டதுமே அதற்குச் சாட்சி.

மயிலாடுதுறை மாவட்டத்திற்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்துவரும் ‘காவிரி’ அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன் எழுதியிருக்கும் ‘ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்?’ என்ற புத்தகம்தான் இந்தப் பரப்புரை பயணத்தின் கதாநாயகன். எந்தப்பக்கத்தைப் புரட்டினாலும் புள்ளிவிவரத்தோடு நறுக்குத்தெறித்தாற் போல அவர் எழுதியிருக்கும் செய்திகளைப் படித்துவிட்டு அந்தந்த இடத்திலேயே ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தவர்களைப் பார்த்தோம்.

‘முதல் நாள் மாலை ஒரு மின்னஞ்சல் அனுப்பி விடுவார்கள். அடுத்த நாள் காலையில் நாங்கள் அடித்துப் பிடித்து நாகப்பட்டினத்திற்கு ஓட வேண்டும். காலை 7 மணிக்கு கிளம்பினால் 12 மணிக்கு சி.இ.ஓ. அலுவலகத்திற்குப் போய்ச் சேர்வோம். கூட்டம் முடிந்து வீடு வந்து சேர இரவு 9 மணியாகிவிடும். அதிகபட்சம் ஒரு மணி நேரக் கூட்டத்திற்கு ஒரு நாள் முழுக்க செலவழிக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நேரத்தில் இப்படி எத்தனை நாட்களைச் செலவிட வேண்டியிருக்கிறது தெரியுமா?’ என்று வேதனையோடு சொன்னார் அரசுப் பள்ளிக்கூட தலைமையாசிரியர் ஒருவர். ‘கூட்டத்திற்குப் போவது கூட பரவாயில்லை; ஒரே ஒரு கடிதம் கொடுப்பதற்கு கூட இங்கே இருந்து நாகப்பட்டினத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறோம். மயிலாடுதுறை மாவட்டமானால்தான் எங்கள் அவலத்திற்கு ஒரு விடிவு பிறக்கும்’ என வெம்பினார் இன்னொரு பள்ளி ஆசிரியர்.

கடுவன்குடிக்குப் பக்கத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதி இல்லாமல் இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் இளம் மனைவியைப் பறிகொடுத்தவர் கோமல் அன்பரசனின் கைகளைப் பிடித்துக்கொண்டு கலங்கி நின்றது அடிவயிற்றைப் பிசைந்தது. மருத்துவ வசதி இல்லாமல் எனக்கு ஏற்பட்ட இழப்பு இங்கே இனிமேல் இன்னொருவருக்கு ஏற்படக்கூடாது. சீக்கிரம் நம்ம மாயவரம் மாவட்டமாக வேண்டும்; இப்படியான அவசரகால உயிரிழப்புகளைத் தடுக்க மருத்துவக்கல்லூரி வேண்டும்’ என்றார். அந்த ஏழைக் கூலித் தொழிலாளியைத் தேற்றுவதற்கு அன்பரசனுக்கு நீண்ட நேரமானது.

‘நாமதான் நாதியத்துப் போய் கிடக்கிறோம். நமக்காக யாருமே கேட்க மாட்டேங்குறாங்க. நீங்களாவது கேட்கிறீங்களே… ஒங்க நல்ல எண்ணம் நிறைவேறட்டும். அதுக்கு எங்க புத்து மாரியம்மன் துணை நிப்பா’ என்று பெண்கள் சேர்ந்து நின்று வழிபட்டு திலகமிட்டு வாழ்த்துச் சொன்னார்கள். அந்த வார்த்தைகளில் எந்தப் போலியும் புனைவும் இல்லை.

‘இவ்வளவு நியாயம் இருக்கு, இத்தனை ஆண்டுகளாக கேட்டுக்கிட்டு இருக்கோம் ஆனா நமக்கு கொடுக்காமல் திடீரென கள்ளக்குறிச்சியை மாவட்டமாக்கி இருக்காங்க. எல்லா ஆட்சியாளர்களுக்கும் நம்மைப் பார்த்தால் இளப்பமாக தெரிகிறது’ என்று கொந்தளித்த வியாபாரி ஒருவரிடம் காவிரி அமைப்பினர் பொறுமையாக விளக்கினர். ‘அப்படின்னா நம்முடைய குரல் இன்னும் வேகமாக, இன்னும் ஒற்றுமையா ஒலிக்க வேண்டும் என்று அர்த்தம். நம்ம கோரிக்கை யாருக்கும் எதிரானது அல்ல. கள்ளக்குறிச்சியையோ அல்லது தேவை இருக்கிற இன்னொரு ஊரையோ மாவட்டம் ஆக்கட்டும். அது அரசின் விருப்பம். ஆனால் எல்லாத் தகுதிகளும், எல்லாத் தேவைகளும் இருந்தும் மயிலாடுதுறையை மட்டும் ஏன் புறக்கணிக்கிறீர்கள்? எங்கள் கண்ணுக்கு மட்டும் ஏன் சுண்ணாம்பு தடவுகிறீர்கள்? என்றுதான் நாம் கேட்கிறோம். நாம ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்; மாவட்டத்தை வென்றெடுப்போம்’ என்று காவிரி அமைப்பின் அந்த இளைஞர் சொல்லி முடித்தவுடன், ‘ அட ஆமாம் தம்பி… நீ சொல்வதும் சரிதான். நாம ஒற்றுமையா நிப்போம் முதல்ல’ என்று புரிந்து கொண்டு சொன்னார் அந்த மணல்மேடு கடைவீதி வியாபாரி.
சில இடங்களில் மாவட்டம் வந்துவிட்டால் நமக்கு எல்லாம் வந்துவிடுமா என்று குண்டக்க, மண்டக்க கேள்வி கேட்டவர்களுக்கு , இப்படி கேட்கிறவர்களுக்குத்தான் இந்தப் புத்தகமே போட்டிருக்கோம். முதலில் இதை உட்கார்ந்து படியுங்கள். அதற்குப் பிறகு இப்படியோர் கேள்வியைக் கேட்கவே மாட்டீர்கள்’ என்று காவிரி இளைஞர் பட்டாளம் பொறுமையாக சொன்னபடி கடந்து சென்றது.

காளி என்கிற ஊருக்குப் பக்கத்தில் பரப்புரையை முடித்துவிட்டு அடுத்த ஊருக்கு கிளம்பியபோது கொளுத்துகிற வெயிலில் முதியவர் ஒருவர் செருப்புக்கூட போடாமல் ஓடிவந்தார். ‘நான் வருவாய்த்துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவன். மாவட்டம் உள்ளிட்ட மயிலாடுதுறை பிரச்சினைகளைப் பற்றியும் நீங்க தொடர்ந்து எழுதிட்டு வருவதைப் படிச்சிட்டு வரேன். நாங்க பட்ட அவஸ்தை அடுத்தத்தலைமுறையும் படக்கூடாது. எப்படியாவது மாவட்டமாக்கிடுங்க.

அதுக்காக நீங்க கூப்பிட்டாலும் நான் வருகிறேன் என்று கோமல் அன்பரசனின் கன்னங்களை அன்போடு அந்தப் பெரியவர் தடவியபோது எல்லோரின் கண்களும் ஒரு கணம் கலங்கின. திருமங்கலம் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வந்தவர்கள் புத்தகத்தை வாங்கிக்கொண்டு நிச்சயமாக நிறைவேற்ற வேண்டிய கோரிக்கை என்று காவிரி அமைப்பினருக்குக் கை குலுக்கி விட்டுப் போனார்கள். ஐந்தரை லட்சம் பேர் கொண்ட பெரம்பலூர் மாவட்டமாகிறது; ஏழரை லட்சம் பேர் இருக்கும் அரியலூர் மாவட்டமாகிறது; ஒன்பதரை லட்சம் பேர் வாழும் மயிலாடுதுறையை மட்டும் ஏன் மாவட்டமாக்க மறுக்கிறீர்கள்? என்று புத்தகத்தில் எழுதியிருந்ததைப் பார்த்த விவசாயி ஒருவர், ‘அடப்பாவிகளா… நாங்க மட்டும் என்ன பாவம் பண்ணுனோம்’ எனக் கேட்டது ரொம்ப பாவமாக இருந்தது. புத்தூரிலும், மயிலாடுதுறையிலும் அவர்களது சங்கக்கூட்டத்திற்காக திரண்டிருந்த நாட்டுப்புறக் கலைஞர்கள், ‘மாவட்டம் அமைய நாங்க என்ன செய்யணும் சொல்லுங்க?’ என்று ஆர்வமாக கேட்டனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘ உங்க பின்னால் நாங்க நிக்கிறோம் அண்ணா. கிராமங்களில் இதனைக் கொண்டு போய் சேர்ப்போம்’ என்று சொல்லி கோமல் அன்பரசனோடு ஆர்வமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்கள். ஆட்டோ ஓட்டுனர்கள், மினி லாரி ஓட்டுனர்கள் ஆர்வமாக பரப்புரை பயணத்தை, ‘ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்’ புத்தகத்தை வாங்கிப் படித்தனர். ரயில் பயணிகள் மாவட்டமானால் கிடைக்கும் நன்மைகளைப் பேசியபடியே புத்தகத்தை வாங்கிக்கொண்டு வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்.
சேத்திரபாலபுரத்தில் பழம்பெரும் காங்கிரஸ்காரரான பொன்கோ, கோமல் அன்பரசனை அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டு ‘உன்னாலதான்யா இதச் செய்ய முடியும். நீ உண்ணாவிரதம் இருக்கக் கூப்பிட்டாக்கூட நான் வரேன்’ உணர்ச்சிப்பொங்கச் சொன்னார். கட்சி, சாதி, மதம் பாகுபாடு இல்லாமல் பயணம் சென்ற இடத்திலெல்லாம் எளிமையாக, அதே நேரத்தில் உள்ளன்போடு மக்கள் கொடுத்த வரவேற்பினால் காவிரி அமைப்பினர் நெகிழ்ந்து போயினர். அத்தனை பேருக்கும் டீ போட்டு கொடுத்தார்கள். கடைகளில் டக்கென குளிர்பானங்களை உடைத்துக் கொடுத்தார்கள். அவசரமாக பக்கத்துக் கடைகளில் ஓடிப்போய் பொன்னாடைகளை, மாலைகளை வாங்கி வந்து போட்டார்கள். எல்லோருமே எளிய மனிதர்கள். ஆர்ப்பாட்டமில்லாமல் அவர்களது அன்பை, ஆதரவைச் சொன்னார்கள். சிறிய குழுக்களாக அங்கங்கே திரண்ட மக்களிடம் மாவட்டம் அமைய வேண்டிய அவசியத்தைத் தன்னுடைய வலிமையான பேச்சின் வழியாக கோமல் அன்பரசன் சலிப்பே இல்லாமல் எடுத்துச் சொன்னபடியே வந்தார். காலையில் தொடங்கி இரவு வரை கொஞ்சமும் சுருதி குறையவில்லை. அவர் ஒரு மடங்கு வேகம் என்றால், அவருடன் வந்தவர்கள் மூன்று மடங்கு உத்வேகத்துடன் இருந்தார்கள். இந்தப் பயணத்தைப் பற்றி ‘காவிரி’ அமைப்பின் தலைவர், தமிழகத்தின் முன்னணி ஊடகவியலாளர்- எழுத்தாளர் கோமல் அன்பரசன் நம்மிடம் பகிர்ந்து கொண்டது….
“நீடூரில் தொடங்கி மணல்மேடு, தலைஞாயிறு, வைத்தீஸ்வரன் கோவில் வழியாக அமைக்க வேண்டிய புதிய மாவட்டத்தின் எல்லையான கொள்ளிடம் வரை முதற்கட்டப்பயணம் நடந்தது. இரண்டாவது கட்டமாக சேத்திரபாலபுரத்தில் தொடங்கி குத்தாலம் வழியாக ஆத்தூர் வரை சென்றோம். மூன்றாவது கட்டமாக மயிலாடுதுறை நகரப்பகுதிகளில் மக்களைச் சந்தித்தோம். நான்காவது கட்டமாக தருமபுரத்தில் இருந்து மன்னம்பந்தல் , செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர் வழியாக தரங்கம்பாடி வரை சென்று வந்திருக்கிறோம். அடுத்தடுத்தக் கட்ட பயணங்களாக மயிலாடுதுறை கோட்டத்திலுள்ள எஞ்சிய ஊர்களுக்கும் செல்லவிருக்கிறோம். நான் நேரடியாக செல்வதைத் தாண்டி இந்தப்பக்கத்தில் உள்ள அத்தனை ஊர்களிலும் காவிரி அமைப்பின் தம்பிகளும், நண்பர்களும் ‘ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்?’ என்ற கேள்வியையும், உணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தும் பணியை முழு வீச்சில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் நேரில் சென்று பார்த்தவரைக்கும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் மயிலாடுதுறை மாவட்டம் ஆக வேண்டும் என்ற உணர்வு நெஞ்சின் ஆழத்தில் கிடக்கிறது. அதை ஒரே குரலாக ஒலிக்க வைக்க வேண்டிய வேலையைத் தான் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமக்கானதை நாம்தானே கேட்டுப் பெற வேண்டும்.

கேட்டவர்களுக்கே எதுவும் கிடைப்பது கடினமாக இருக்கிறது. நாம் கேட்காமலே இருந்துவிட்டால் எப்படி கிடைக்கும்? என்னதான் நம் கோரிக்கையில் 200% நியாயம் இருந்தாலும் அழுகிற பிள்ளைதானே பால் குடிக்கும்?

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக எங்களுக்கு வாய்த்த மக்கள் பிரதிநிதிகளால் எந்தப் பயனும் இல்லாமல் போனதால், வேறு வழியின்றி நாங்களே களம் இறங்கி இருக்கிறோம். செய்வது இரண்டாம் பட்சம். குறைந்தது, மயிலாடுதுறை கோட்டப்பகுதி மக்களின் வலியையும், வேதனையையும் உணர்ந்து மாவட்டம் ஆக்குகிறோம் என்ற வாக்குறுதியைக் கூட தருவதற்கு எந்தப் பெரிய கட்சிகளும் தயாராக இல்லை.

கடந்த தேர்தல்களில் முக்கியமான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் மயிலாடுதுறை மாவட்டக் கோரிக்கையை எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என்ற என்னுடைய தனிப்பட்ட முயற்சிகள் பலனிக்கவில்லை. தங்கள் சுய லாபங்களுக்காக அதனைப் பலர் தடுத்து நின்றார்கள்; இப்போதும் தடுக்கிறார்கள். இனி இவர்களை நம்பிப் பயனில்லை; மக்களிடம் இருந்து ஆரம்பிப்போம் என்றுதான் இறங்கிவிட்டோம். மக்களுக்கு உணர்வூட்டிவிட்டால், எல்லாரையும் அதைப் பற்றி பேச வைத்துவிட்டால், நிச்சயம் ஒருநாள் நடந்துவிடும். ஏனென்றால் நல்ல எண்ணங்களுக்கு எப்போதும் வலிமை அதிகம். நான் ஒருவன் நினைப்பதை, 10 பேர், 100 பேர், 1000 பேர், லட்சம் பேர் நினைக்கத் தொடங்கிவிட்டால் அந்த எண்ணங்களின் வலிமை செயலாக வடிவம் பெற்றுவிடும்” என்ற கோமல் அன்பரசனின் வார்த்தைகளில் தெறித்த உறுதி, இவர் மயிலாடுதுறை மாவட்டம் ஆகும் வரை ஓயமாட்டார் என்பதை அடித்துச் சொன்னது. இவர்களின் நியாயமான கோரிக்கையும், ஜனநாயக வழியில் இந்த இளைஞர்கள் எழுப்பும் ஆணித்தரமான குரலும் அரசின் செவிகளுக்கு எட்டுமா? கோமல் அன்பரசன் சொல்லும் நல்ல எண்ணங்களுக்கான வலிமை அதனைச் செயல்படுத்துமா? காலம் என்ன பதில் வைத்திருக்கிறது பார்க்கலாம்..

– மயிலைப்பிரியன்

  • Mirthulamahi

    Mirthulamahi

    29th March 2019

    Anna super i am transwomen miruthuala mahi from mayiladuthurai koorai nadu nanum en society people lum kural kodukka

Leave your comment
Comment
Name
Email