புத்துணர்வூட்டும் நட்பால் நிபந்தனையற்ற அன்பால் ஓடிக்கொண்டிருக்கிறேன்! – அர்ச்சனா ஸ்டாலின்

Share this

பொதுவாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு வியாபார நிறுவனங்களின் குளிர்சாதன அறைகளில் தன் திறமைகளைப் புதைத்துவிடும் இளம்பெண்களுக்கு மத்தியில் தனியாக நின்று இன்றைய தலையாய தேவையான ‘வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம்’என்பதை, ‘நமக்கு தேவையானதை நாமே வளர்ப்போம்’ என்ற முழக்கத்துடன் My Harvest என்ற ஒரு நிறுவனத்தை கணவர் ஸ்டாலினுடன் சேர்ந்து நடத்தும் ஓர் இளம் திறமையாளர். கணவரை ‘விவசாயி’ என்று பெருமையுடன் அறிமுகப்படுத்தும் நேர்மை, அதிசயம் மற்றும் அழகு. சமீபத்தில் TED TALK – நிகழ்ச்சியில் தனது அழகான உரையின் மூலம் பலரை யோசிக்க வைத்த பெண் ஆளுமை. அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் நேர்காணல் செய்யப்பட்ட எதிர்கால நம்பிக்கை என்று நீளும் இவரின் அறிமுகம். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவருடைய பதில்கள்;  பதில்களின் எளிமையே நம்மை யோசிக்க வைக்கும் வேர் கொஞ்சம் நிதானமாக அவரின் பதில்களைப் படிப்போம். கூடிய விரைவில் நகரம் தோறும் பெண் முகவர்களுடன் இந்நிறுவனம் நம் வீடுகளை அடைய இருப்பது அதன் பலம்.

1.Passion –  அதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?
என்னுடைய பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுவதற்காக பள்ளிகளில் நிறுவப்பட்ட சங்கங்களில் தலைமைப்  பதவி வகித்துள்ளேன். இந்தச் சிந்தனைகள் கல்லூரியிலும்  தொடர்ந்தது. இது என்னுடைய பேரார்வத்தைக் கண்டு பிடிப்பதற்கான முதல் படியாக அமைந்தது. சமுதாயத்தில் பெருமளவு மாற்றத்தை, இயற்கை விவசாயத்தில் கொண்டு வர இயலும் என்று உணர்ந்தேன். இந்த எண்ணத்தின் விளைவே , myharvest .

2.உங்களுடைய Passion-ஐ செய்ய விடாது நடைமுறை வாழ்க்கை தடுத்திருக்குமே? அப்போதெல்லாம் எப்படி வெளியே வந்தீர்கள்?
பல்வேறு எதிர்ப்புகள் பலதரப்புகளில் இருந்தும் எழுந்தன. சில முடிவுகளை என் பெற்றோர்கூட எதிர்த்தனர். அவற்றையெல்லாம் என்னுடைய திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்ளும் ஒரு கருவியாக எடுத்துக் கொண்டேன். ஆக்கபூர்வமான சிந்தனைகள் உள்ள மனிதர்களுடன் பழகுவதன் மூலம் அவற்றை எதிர்கொள்ளக் கற்றுக்கொண்டேன்.

3.வெற்றிபெற்று அடுத்த நிலையை அடையும் மனிதர்களைப் பார்க்கும்போது என்ன தோன்றும்?
சில மனிதர்கள் வெற்றியடைய தேர்ந்தெடுக்கும் கடினமான பாதையைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கும். என்னுள் ஓர் உத்வேகம் பிறக்கும்.என்னாலும் அடுத்தவர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர இயலும் என்ற நம்பிக்கை பிறக்கும். அவர்களிடமிருந்து நிறைய பாடங்களைக் கற்றுக் கொள்ள இயலும்.ஒவ்வொரு சூழ்நிலையையும் எப்படிக்  கையாளவேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்.சில நேரங்களில் அவர்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல்கூட ஏற்படும்.

4.கடந்த கால அவமானங்கள் உங்களுக்கு என்னவாக இருக்கின்றன? இப்போதும்/எப்போதும்?
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என்னுடைய வாழ்வில் அவமானம் என்று பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் ஒரு சில சமயங்களில் சமூகத்திற்கு அப்பாற்பட்ட சில விஷயங்களில் ஈடுபடும்போது சில எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது.அப்போது அதை வார்த்தைகளின் மூலம் எதிர்கொள்ள மாட்டேன். செயல்களால் எதிர்கொள்வேன்.பொதுவாழ்வில் ஈடுபடும்போது அவமானங்கள் தவிர்க்க முடியாதவை. அவற்றைப்பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டிருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடையமுடியாது.

5.புதுமையாகச் சிந்தித்தால் இந்தச் சமூகத்தில் அவ்வளவு எளிதல்ல. எப்படி எதிர் கொள்கிறீர்கள்?
சமூகத்திற்கு மாறாக ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்யும்போது, ஏன் சிந்திக்கும் போதுகூட எதிர்ப்பு வருவது இயற்கை. அதற்காக அந்த விஷயத்தைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. அவ்வாறு செய்யும்போது வரும் எதிர்ப்புகளை ஆக்கபூர்வமாக விமர்சனமாக ஏற்றுக்கொள்வேன். என்னைப் போன்ற சிந்தனை உள்ள மனிதர்களிடம் கலந்தாலோசிப்பேன். அதன்முலம் அதனை இன்னும் எவ்வாறு சிறப்பாகச் செய்யலாம் என்ற தெளிவு கிடைக்கிறது. இவ்வாறு கிடைத்த தெளிவின் மூலம் ஆரம்பித்த ஒரு நிறுவனமே myharvest. இந்நிறுவனத்தைத் தொடங்கும்போது, பொறியியல் பட்டதாரியான நான் இயற்கை விவசாயத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக என்னை விமர்சித்தனர். ஆனால் அவற்றைக் கண்டு நான் அஞ்சவில்லை. மாறாக, உற்சாகம் அடைந்தேன். இன்றும் இயற்கை விவசாயத்தின் மூலம் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றம்  கொண்டு வர முடியும் என்று மிக தீர்க்கமாக நம்புகிறேன்.

6.முதல் வெற்றி என்று எதைச் சொல்வீர்கள்?
விருதுநகரில் உள்ள ஒரு கிராமத்தில் ஓர் ஊருணி வறண்டு கிடந்தது.என்னுடைய குழுவினர் அங்குள்ள கிராமத்து மக்களின் உதவியோடு அதனை சீரமைத்தனர்.இதன் பயன்,அடுத்த 45 நாட்களில் தெரிந்தது. அப்போது பெய்த மழையால் அந்த ஊருணி 20 வருடங்களுக்கு பிறகு நிரம்பியது. அதனைக் கண்டு அந்தக் கிராமத்து மக்கள் அடைந்த மகிழ்ச்சியே, என்னுடைய முதல் வெற்றியாகக் கருதுகிறேன்.

7.கடைசி வெற்றி என்று ஒன்று இருக்கிறதா?
வெற்றி எனபதற்கு முடிவில்லை. இவ்வாறு நினைத்தால்தான்  அடுத்த இலக்கை நோக்கி  நாம் வெகுவாக  முன்னேற முடியும்.

8.நீங்கள் விரும்பி படிக்கும் புத்தகங்கள், நீங்கள் நம்பிக்கைக்கு உதவிய விதம் பற்றி …
குறிப்பிட்ட சில ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.  அவர்களின் உத்திகள், வெற்றிகள், தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் போன்றவை என்னை வெகுவாக ஈர்க்கும். அதைத்தவிர சுற்றுப்புறச் சூழல் பற்றியும் தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் உண்டு. இணையதளக் காணொளி மூலம் பல்வேறு தகவல்களைப் பரிமாறிக்கொல்வது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு. இவற்றின் மூலம் என்னுடைய வாழ்க்கையின் தேடல் தொடர்கிறது.

9.தினசரி எழுதல் /பணிகள் முடித்தல் /உறங்கச் செல்லுதல் – உங்களின் வேலைநேர அட்டவணை எப்படி இயங்குகிறது?
பொதுவாக நான் திட்டமிட்டு வேலை செய்வதில்லை என்னுடைய குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்வதற்கு முன்னுரிமை அளிப்பேன். ஒரு நாளில் ஒரு சில மணிநேரங்களாவது எனக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து  கொள்வேன். மற்றபடி சூழ்நிலைக்கேற்ப என்னுடைய பணிகளை நிறைவேற்றுவேன்.

10.என் மறைவுக்குப்  பின் என்று ஒரு பார்வை இருக்கிறது. அதில் என்னவாக பார்க்கப்பட விரும்புகிறீர்கள்?
என்னைப் பற்றி மற்றவர்கள் நினைக்கும்போது என்னுடய புன்னகை அவர்களின் மனதில் தோன்ற வேண்டும். மனதில் மகிழ்ச்சி நிலவ வேண்டும்.நான் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து ஏதாவது கற்றுக்கொண்டால் சிறப்பு.

11.பொருளாதார  வெற்றி பற்றி உங்களின் பார்வை?
பொருளாதாரம் என்பது ஒருவரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவும் ஒரு கருவி.எண்னைப்  பொருத்தமட்டில்  அதிகம் சம்பாதித்து,பொருள் சேர்ப்பது  மட்டும் பொருளாதார வளர்ச்சி இல்லை.  ஒரு நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி ஏழை மக்களின் வாழ்வின் தரத்தை ,அவர்களுக்கு  வேலை வாய்ப்புகள் அளிப்பதன் மூலம் உயர்த்துவது.இவ்வெற்றிக்கு ஒரு சிருபங்காக நாங்கள் ‘BUDS’ என்னும் அமைப்பைக் கல்லூரி நாட்களிலேயே உருவாக்கினோம்.  இந்த அமைப்பின்முலம் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்தோம்.அங்குள்ள பெண்களுக்குத் தையல்பயிற்சி  கொடுத்தோம். இதனால் அவர்களது பொருளாதாரம் ஓரளவு முன்னேற்றம் அடைந்தது.

12.நீங்கள் முன்னேறி  வரும்போது எதிர்ப்பார்த்த அதே உதவியை,  நீங்களும் செய்கிறீர்களா ?
நான் முன்னேறி   வருவதற்கு எனக்குக் கிடைத்த உதவிகள் பல.அந்த அளவிற்குச் செய்ய முடிவதில்லை. எனினும் என்னால் முடிந்தவரை பிறர்க்கு உதவுகிறேன். எங்களுடைய நிறுவனமான  myHarvestஇன்  அடிப்படை, முடிந்த அளவிற்கு விவசாயத்துறையில் வேலை வாய்ப்பு உருவாக்குவதே ஆகும். இதன் மூலம் எனனைச் சுற்றியுள்ளவர்களுக்கு  ஓரளவு  உதவ முடிகின்றது. எனக்கு ஒரு சிறந்த நட்புவட்டம் உண்டு. அவர்களின்  மூலமும் சில உதவிகளைச் செய்கின்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக பள்ளிக் குழந்தைகளுக்கு விவசாயத்தைப்  பற்றி அளிக்கும் விழிப்புணர்வை  எனது சிறந்த பணியாகக்  கருதுகிறேன்.

13.இப்போது நீங்கள் சாதிப்பதை, எதிர்காலத்தில் யாராவது முறியடிக்கக்கூடும்  என்று நீங்கள் நம்புகிறீர்களா?
ஆம்.நிச்சியமாக. ஒவ்வொரு சாதனைகளையும் இன்னொருவர் முறியடித்தால்தான்  ஒவ்வொரு துறையிலும்  மாற்றம் நிகழும். சமுதாயம்  மேலும் முன்னேற அது வழிவகுக்கும். இருப்பினும் எனக்கென்று தனிப்பட்ட  அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள அயராது உழைப்பேன்.

14.இந்த  passion என்கிற ஒன்றுக்காக நீங்கள் இழப்பது எதை? எவற்றை? அப்போதெல்லாம் மனதிற்குள் சொல்லிக்கொள்வது என்ன?
மற்றவர்களைப் போல என்னால் குடும்ப விழாக்களில் பெரிதாக நேரத்தைச் செலவிட முடிவதில்லை. என்னுடைய குறிக்கோளுக்காக  என்னுடைய corporate வேலையை விட்டு விட்டேன். அனால் இதற்காக நான் வருந்தவில்லை. ஒரு புது முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளதால் நான் செய்யும் ஒவ்வொரு வேலையையும் ஓர் அனுபவமாகவே எடுத்துக் கொள்கிறேன். இதனால் என்னால் மேலும் முன்னேறி செல்லமுடிகிறது .

15.ஒரு வரி உங்களின் ஓட்டத்தில் உங்களுடன் பயணித்து கொண்டே இருக்கிறதெனில் அந்த வரி எது? ஏன்?
“நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சாதனையாக இருக்க வேண்டும்” என்ற டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் சிந்தனை. நான் ஒவ்வொரு செயல் செய்யும்போதும் இந்த வரி என்னுள் ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தும். அதனால் அச்செயலை மிகவும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன்.இதனால் எனக்கு ஒரு பொறுப்புணர்வு ஏற்படுகிறது.

16.கோபம் ஓர் இயற்கையான உணர்வு.அதை கையாளும் விதம் பற்றி?
ஐந்து  வருடங்கள் முன்பு வரை எனக்கு கோபம் அவ்வளவு எளிதாக வந்ததில்லை. அனால் தற்போது ஒரு சில சூழ்நிலைகளில் கோபம் வருகிறது. அப்பொழுது படம் வரைவதன்  மூலமும் இசை கேட்பதன் மூலமும் என்னை அமைதியாக்கிக்கொள்வேன் கோபத்தில் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். என்னுடைய மிகப் பெரிய பலம் வெகு விரைவில் கோபத்தில் இருந்து விடுபடுவது .அதனால் கோபம் என்னை அதிகமாகப்  பாதித்ததில்லை.

17.ஏமாற்றமான நேரங்களில் உடனே செய்வது என்ன?
உடனே நண்பர்களுடன் சாப்பிடுவதற்கு வெளியே சென்று விடுவேன்.நண்பர்கள் ஒரு பூஸ்ட் மாதிரி. அவர்களிடம் செலவிடும் ஒவ்வொரு மணித்துளியும் எனக்குப்  புத்துணர்வைத் தருகிறது. அதன்மூலம் மீண்டும் ஓடுவதற்கு என்னை தயார் செய்து கொள்வேன்.

18.பள்ளி, கல்லூரிக் கால நட்பு உங்களின் தற்போதய பயணங்களில் இடம் பிடிக்கிறதா? அல்லது வெறும் நட்பாகவே நிற்கிறதா?
என்னுடைய கணவரே என்னுடைய கல்லூரித் தோழன் தான்.என்னுடைய பள்ளித் தோழிகளை சில நாள்களுக்கு ஒருமுறையாவது சந்தித்துவிடுவேன். அவர்கள் அளிக்கும் நம்பிக்கை எனக்குப் பல வகைகளில் உற்சாகம் தருகிறது. facebook மூலமும் ஓரளவு அனைவரிடமும் தொடர்பில் உள்ளேன். குடும்பத்தை விட நண்பர்களோடுதான் அதிக நேரம் செலவிடுகிறேன்.

19.குடும்ப உறுப்பினர்களில் நீங்கள் பிரம்மித்துப்  போகும் நபர் யார்?  என்ன  காரணம்?
உண்மையைச் சொல்லப் போனால் நான் பிரம்மித்து போகும் நபர்கள் இருவர். ஒருவர் என் அம்மா இன்னொருவர் என் அத்தை (கணவரின் தாயார்). இருவரிடமும் நான் வியப்பது அவர்களின் ‘நிபந்தனையற்ற அன்பு ‘.

20.இந்த நேர்க்கானலுக்குப்பின் இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
என்னுடைய வாழ்க்கையை மீண்டும் திரும்பிப் பார்த்ததைப்போல இருந்தது. பரவாயில்லை நானும் ஏதோ உறுப்படியாகச் செய்திருக்கிறேன் போலிருக்கிறது என்கிற உணர்வு ஏற்படுகிறது. நிறைவாக உள்ளது.இந்த நேர்காணலைப் படித்து யாராவது ஊக்கமடைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

______________________________________

SOURCE:

நமது நம்பிக்கை – இது வெற்றிகளின் தலைவாசல்

Owned By – மரபின் மைந்தன் முத்தையா

WEBSITE

INTERVIEW BY – JEYASEKARAN

Leave your comment
Comment
Name
Email