இயக்குநர் மகேந்திரன் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவு 

Share this

இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இவருக்கு அலெக்ஸாண்டர் என பெயர் வைத்தனர்.

இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் “இண்டர்மீடியட்” படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் “பி.ஏ” பொருளாதாரம் படித்தார்.

1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார்.

“நம் கல்லூரியில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது” என்று பேசினார்.

இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், “நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர், வாழ்க” என்று எழுதி கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார். கல்லூரியில் படிக்கும் போதே கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார்.

சட்டக் கல்லூரியில் படிக்க சென்னை வந்தவர், இனமுழக்கம் பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார். அதில் சினிமா விமர்சனமும் எழுதினார்.

“இன்பக்கனவு” நாடகத்தில் நடித்தபோது கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்கப் போவது பற்றி அறிவிக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.

அந்தக் கூட்டத்துக்கு மகேந்திரன் சென்றிருந்தார். அவரைப் பார்த்த எம்.ஜி.ஆர், “நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே” என்று கேட்டார். மகேந்திரன், “ஆமாம்” என்றார்.

“நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்” என்றார், எம்.ஜி.ஆர்.

மறுநாள் காலை மகேந்திரன், ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார். மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்து கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலை திரைக்கதை எழுதச் சொன்னர் எம்.ஜி.ஆர்.

பொன்னியின் செல்வனை படமாக்கும் திட்டம் தள்ளிப் போனதால் தனது நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.

செய்தி: G.பாலன்

Leave your comment
Comment
Name
Email