நாணய அரசியலின் நாயகர் தியாகி நாராயணசாமி நாயுடு! மயிலாடுதுறைக்கு பெருமை சேர்த்தவரின் சாதனை பயணம்! கோமல் அன்பரசன்

Share this

சில  பெயர்களை நாம் ரொம்பவும்  எளிதாக கடந்து போய் விடுகிறோம். பார்த்து பார்த்து பழகிய அந்தப் பெயர்களைப்  பத்தோடு பதினொன்றாக காலம் நமக்குள் கரைத்துவிடுகிறது. முழுப்பெயரையும் சொல்வதற்கு கூட நேரமில்லாமல்  முதல்  எழுத்தை மட்டும் சுருக்கி நாம் அழைக்கிற பெயர்களும் இருக்கவே செய்கின்றன. ஆண்டுகள் ஓடி மறையும்போது அந்த முதல் எழுத்துகளுக்கான   விரிவாக்கத்தை சரியாக சொல்வதற்கு கூட பலருக்கும்  தெரியாமல் போய்விடுகிறது. ஊர்களைப்  போலவே இந்த பெயர்களுக்கு  பின்னாலும் வரலாறுகள் புதைந்து கிடக்கின்றன. மயிலாடுதுறை வாசிகள் நகரத்தின் மையத்தில் இருக்கிற  நகராட்சி மேல்நிலைப்  பள்ளியை  கடந்து போகிற போதெல்லாம் கண்ணில் படுகிற பெயர் தியாகி நாராயணசாமி.

அரை நூற்றாண்டுக்கு முன்பாக இதே மண்ணில் பல சாதனைகளை நிகழ்த்திய இந்தப் பெயருக்குச் சொந்தக்காரரை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ‘நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத் தலைவர் தானே அவரை தெரியாமல் இருக்குமா?’ என்று சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த தியாகி நாராயணசாமி நாயுடு, சிலர் நினைப்பதை போல் விவசாய சங்கத்தலைவர் அல்லர். அவர் வேறு; இவர் வேறு. தியாகி நாராயணசாமியும் விவசாயிகளுக்காக பாடுபட்டிருக்கிறார். அதையெல்லாம் தாண்டி இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடி, ஆங்கிலேய போலீசாரிடம் அடியும் உதையும் வாங்கி சிறை தண்டனை அனுபவித்தவர்.

கள்ளுக்கடை மறியல், கதர் ஆடை விற்பனை, உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என காந்தியடிகள் நிகழ்த்திய அத்தனை போராட்டங்களிலும் 15 வயதில் இருந்தே பங்கேற்ற தியாகி நாராயணசாமி அகிம்சை போரின் ஆயுதமாக திகழ்ந்திருக்கிறார். சுதந்திர போராட்ட காலத்தில் மாயூரம் பெரியகோயிலின் இரண்டு கோபுர கலசங்களுக்கு இடையே மூவர்ண கொடியை பறக்கவிட்டு கவனத்தை ஈர்த்தவர். ரயில்வே துறையில் தொழிலாளராக வேலையில் சேர்ந்து, தொழிற்சங்க செயலாளரானவர். இவர் செயலாளராக இருந்த போதுதான் திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சங்க கட்டிடத்திற்கு காந்தியடிகள் அடிக்கல் நாட்டினார். பொன்மலை தொழிலாளர் நல அச்சகம் ஏற்படுத்தப்பட்டதும் இவரது காலத்தில்தான். சுதந்திரப் போராட்டம் மட்டுமல்ல; விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் நாயுடுவின் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

மருத்துவர் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம், உணவு விடுதி தொழிலாளர்கள் சங்கம், குலாலர் சங்கம், செங்கல் வீடு கட்டும் தொழிலாளர்கள் சங்கம், நெசவுத் தொழிலாளர்கள் சங்கம், வண்டி தொழிலாளர்கள் சங்கம், வர்த்தக தொழிலாளர்கள் சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் சங்கம், குத்தாலம் விவசாயக் கூட்டுறவு சங்கம், கழுக்காணி முட்டம் விவசாய கூட்டுறவு சங்கம்,  தலைஞாயிறு செங்கல் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், கூறைநாடு தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கம் என 14 சங்கங்களில் அங்கம் வகித்து அத்தனை தொழிலாளர்களின் நலனுக்காகவும் இயங்கியவர்.

விடுதலைப் போராட்டக்காலத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘தொழிலாளர் இந்தியா’, ‘கிராமவாசி’ ஆகிய பத்திரிகைகளை நடத்தியவர். இந்த இதழ்களின் ஆசிரியராக, மயிலாடுதுறைக்கு வந்து நாராயணசாமி நாயுடுவின் வீட்டிலேயே தங்கியிருந்து வேலை பார்த்தவர் ஆர். வெங்கட்ராமன். ஆமாம்… பிற்காலத்தில் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த அதே வெங்கட்ராமன்தான். இளைஞர் வெங்கட்ராமனுக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்க காமராஜருக்குப் பரிந்துரைத்தவர் நாராயணசாமி நாயுடு.

நாட்டின் விடுதலைக்குப் பிறகு மக்களின் மாறாத அன்பினால், மயிலாடுதுறை நகர மன்ற துணைத்தலைவராகவும், மூன்று முறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் நாராயணசாமி நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952ல் ஆடுதுறை தொகுதியிலும், 1957 மற்றும் 1962 ஆண்டு தேர்தல்களில் மாயூரம் தொகுதியிலும் எம்.எல்.ஏ வாக இருந்தார். இந்தக்காலக்கட்டத்தில் அவர் ஆற்றிய பணிகள் வரலாற்றுக்கல்வெட்டில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

விவசாய மசோதா, பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் – 1957, அறுபதிற்கு நாற்பது சட்டம் – 1958, மாயூரம் மற்றும் மாயூரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்புச் சட்டம் , கோயில் நிலங்களைப் பிரித்தல், விவசாய கூட்டுறவு சங்கம் அமைத்தல் ஆகியவை சட்டமன்றத்தில் நாயுடு பேசிப் பேசி ஏற்படுத்தியவை. இதில் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்திற்காக போராடி 8 மாதங்கள் சிறையில் இருந்தவர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து கொண்டே, அக்கட்சியின் ஆட்சியிலேயே போராடி இச்சட்டத்தைக் கொண்டு வந்தவர். இன்றைக்கும் இச்சட்டம் ‘மாயூரம் ஒப்பந்தம்’ என்றே அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சாதி மத மாச்சரியங்களை ஒழிக்க வீட்டிலேயே சம பந்தி நடத்தினர். பெரியார், காமராஜர், கக்கன், பக்தவச்சலம்  போன்ற தலைவர்களை அதற்கு அழைத்துவந்தார். தாழ்த்தப்பட்டவர்களின் ஆலய நுழைவு உரிமைக்காக போராடியவர். குடிநீர்ப்பஞ்சத்தைப் போக்க குளங்களை தூர் வாரியவர். அந்தப் பணிகளின் போது  அதிகாரிகள், பொது மக்களோடு தானும் முன்னின்று வேலைகளைச் செய்தவர். வேலையின்  களைப்பு தெரியாமல்  இருக்க பாடல்களைப் பாடி  உற்சாகப்படுத்தியவர். ஒரு  எம்.எல்.ஏ எப்படி எல்லாம் இருந்திருக்கிறார் பாருங்கள்.

தியாகிகள்  நலன்களுக்காகவும் பாடுபட்டவர். மீனவர்களுக்கு  நிரந்தர  வீடு கட்டித்தருவதற்கும், பத்திரிகை  தொழிலாளர் நலன்களிலும் அக்கறை காட்டியவர். தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்குப் பக்கத்திலுள்ள மணத்திடல் என்ற கிராமத்தைப்  பூர்வீகமாக கொண்ட ஜமீன் குடும்பத்தில்  பிறந்து, இளம் வயதிலேயே  தாய், தந்தையை இழந்து, தாத்தாவிடம் வளர்ந்து, ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பால் அத்தனை சொத்துகளையும் இழந்து முதலில் திருவாரூரிலும் பின்னர் மாயூரத்திலும் ஆதரிக்க யாருமின்றி தஞ்சமடைந்த நாராயணசாமி, அந்த மக்களின் அன்பை வென்றெடுத்த வரலாறு அசாத்தியமானது.

தஞ்சை அரண்மனை பாடசாலையில் இளவரசர்களோடு ஆரம்பக்கல்வியைப் படிக்க ஆரம்பித்து, காலச்  சூழலில் சிக்கி மேல மடவிளாகம்  ஆரியபாலா பள்ளியில் 8  வகுப்பு வரை படித்து, நகராட்சிப் பள்ளியின்  9 வகுப்புக்கு  மேல்  படிக்க முடியாமல் போனவர். ஆதரிக்க யாருமில்லாததால் நாரயணசாமி நாயுடு கல்வி இழந்த அந்த நகராட்சிப் பள்ளிக்கூடம்தான் இன்றைக்கு அவரது பெயரைத் தாங்கி நிற்கிறது.

“நாளைக்கு  எல்லாம் பண்ணுவதற்கு கையில் பணம் இருக்காப்பா?” சுதந்திரப்  போராட்டத்  தியாகியாக, தொழிலாளர் தலைவராக, பத்திரிகை நடத்தியவராக, நகரமன்றத் துணைத்தலைவராக, மூன்று முறை எம்.எல்.ஏ வாக இப்படியோர் நிறைவாழ்வு  வாழ்ந்த தியாகி நாராயணசாமி மூச்சை நிறுத்திக்கொள்வதற்கு  முன் கடைசியாக தன் குடும்பத்தாரிடம்  கேட்ட வார்த்தைகள் இவை. காந்தியோடும் நேருவோடும் காமராஜரோடும்  தாத்தா இருக்கும் கறுப்பு  வெள்ளை படங்களையும், அவர் சேர்த்து வைத்த அழியாப்  புகழ் என்னும் சொத்தையும் நெஞ்சில் சுமந்தபடி நாராயணசாமி நாயுடுவின் பேரன் சரவணன், மயிலாடுதுறையில் சிறு  தொழில்  நடத்திக்கொண்டிருக்கிறார். நெஞ்சைத்  தொட்டுச்சொல்லுங்கள்… பேரனால் மட்டுமே கொண்டாடப்பட  வேண்டியவரா அந்தப் பெருந்தகை ?!

நன்றி : திரு.கோமல் அன்பரசன் – காவிரிக்கதிர் மாத இதழ்

  • சுந்தர்ராஜ் சி

    சுந்தர்ராஜ் சி

    14th April 2019

    *மயிலை குரு நம் மனதின் குரு*….👍👍👍

Leave your comment
Comment
Name
Email