ஏழைகள் உயர்கல்விக்கு கை கொடுக்கும் ஆனந்தம், கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை

Share this

பொருளாதார வசதியற்ற, உயர்கல்வி தொடர முடியாத பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆனந்தம் யூத் பவுண்டேசன்’ அமைப்பு, நூறு சதவீதம் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் தர உள்ளது.

தமிழகத்தின் கிராமங்களில் இருந்து சென்னைக்கு வந்து பல துறைகளில் இருக்கும் இளைஞர்கள் இணைந்து ஆனந்தம் இளைஞர் நல அமைப்பு நடத்தி வருகின்றனர். இதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளில், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு பள்ளி மாணவர்கள், ஐஏஎஸ், டாக்டர், இன்ஜினியர், வேளாண், சட்டம், டிகிரி, டிப்ளமோ போன்ற உயர் படிப்புகளை, கல்வி உதவித்தொகையுடன் பயின்று வருகின்றனர். இதில் பலர் இன்போசிஸ், ஐபிஎம், அசென்ஞ்சர், டிவிஎஸ், ஐடிசி, கெவின் கேர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இந்த ஆண்டும், கல்வி உதவித் தொகைக்கான மாணவர் தேர்வை ஆனந்தம் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து ஆனந்தம் அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது:

பொருளாதாரத்தில் மிக, மிகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், உயர்கல்வி சேருவதற்கு தேவையான சிறந்த மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவர்கள், வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறோம்.

பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து ஆனந்தம் அமைப்பின் விதிகளுக்குட்பட்டு தகுதியான மாணவர்களை தேர்வு செய்கிறோம்.

ஆனந்தம் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகள், தங்களின் விண்ணப்பக் கடிதம், மதிப்பெண் சான்றிதழ் நகல், உயர்கல்வி படிக்க தேர்வு செய்துள்ள படிப்பு ஆகிய விவரங்களுடன், மே 8ஆம் தேதிக்குள், ‘ஆனந்தம் யூத் பவுண்டேசன்’ 15/21, பசுமார்த்தி தெரு, 2வது சந்து, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை 24. முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

இந்த ஆண்டு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளோம். அரசுப் பள்ளிகளில் படித்து, இப்போது அரசு மருத்துவக்கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் பலர் தொடர்ந்து உரிய கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பு தொடருவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

அத்தகைய மாணவர்களும் விண்ணப்பங்கள் அனுப்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comment
Comment
Name
Email