அரசியிலைக் கண்டு அஞ்சும் மாணவர்கள்..! அதிர்ச்சி ‘ரிப்போர்ட் ‘

Share this

“இந்திய இளைஞர்களே எழுச்சு காணுங்கள்” என்று தன் கம்பீரக் குரலின் மூலம் அன்றைய இளைஞர்களை எல்லாம் தட்டி எழுப்பிய சுவாமி விவேகானந்தர் முதல் “இளைஞர்களே கனவு காணுங்கள்” என்று கூறிய இந்திய முன்னாள் ஜானதிபதி அப்துல் கலாம் வரை சொல்லுகின்ற, நம்மப்படுகிற வார்த்தை “நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் ..!”

இப்படி எத்தனை தலைமுறைக்கு நாளைய இந்தியா இளைஞர்கள் கையில்’ என்று சொல்லிக்கொண்டே போவது? இந்தியாவை மாற்றி அமைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள இளைஞர்கள் எப்போது முன் வரப்போகிறார்கள்? இந்தியாவை மாற்றப் போகும் அந்த இளைஞர்கள் எந்தத் தலைமுறையில் உருவாகப் போகிறார்கள்? நினைத்துப் பார்த்தால் மிகப் பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது .

ஒரு நாட்டை வளர்ச்சிப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்கச் செய்ய வேண்டுமென்றால்… அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் சீரான முறையில் அமைய வேண்டுமென்றால்… அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் சீரான முறையில் அமைய வேண்டுமென்றால் அது அரசியல் வழியாக மட்டும்தான் முடியுமே தவிர வேறு மாற்று வழிகள் கிடையாது. ஆனால் “துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்கிற பழமொழி போல் அரசியலைக் கண்டு தலைதெறிக்க ஓடிகிறாரகள் இந்தக் காலத்து மாணவர்கள்.

பொறியியல், அறிவியல், புவியியல், வானவியல், மருத்துவம், சட்டம், சினிமா, விளையாட்டு மற்றும் கலை உள்பட பல்வேறு துறைகளில் சாதனைகள் படைக்கும் மாணவ சமுதாயம் அரசியல் துறை கண்டு மட்டும் ஏனோ ஓடி ஒளிந்து கொள்கிறது. இன்றைய மாணவர்களிடம் “நீ படித்து முடித்து என்ன உத்தியோகம் பார்க்கப் போகிறாய்,?” என்று கேட்டால், பொறியாளர், மருத்துவர், மென்பொருள் நிபுணன் அல்லது பத்திரிக்கையாளன் ஆவேன் என்பார்களே தவிர ஓருபோதும் அரசியல்வாதியாக ஆவேன் என்று சொல்லமாட்டார்கள். அந்த அளவிற்கு அரசியலை அவர்கள் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அரசியல் என்றாலே சாக்கடைதான், அது காசு பணம் சம்பாதிக்கிற தொழில் அல்லது தேர்தல் மட்டுமே அரசியல் என்று நினைக்கிறார்கள் அவர்கள்.

சில காலம் முன்பு வரை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் தலைவனை, தேர்தல் மூலம் தேர்ந்து எடுப்பார்கள். ஆனால் அது எல்லாம் இப்போது மலை ஏறிப்போய்விட்டது. அரசியல் மீது அக்கறையோ, அதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமோ காட்ட மறுக்கிறார்கள்.

மாநில, மத்திய தேர்தலுக்கு வாக்கு செலுத்தும்போதுகூட பெற்றோர் கூறும் கட்சிகளுக்கே வாக்கு போடுகிறார்கள். இல்லையென்றால் ஓட்டுப்போடச் செல்வதில்லை. இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் மாணவர்களின் வாக்குகள், ஓர் அறிவுடன் பதிவு செய்யப்படுவதில்லை என்பது திரை மறைவு உண்மை.

இந்த நிலைமையை மாற்ற அவர்கள் கொஞ்சமும் முன்வரவில்லை. தமிழ்சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல் இந்த சமூகத்தை யாரவது வந்து மாற்றிவிடமாட்டார்களா என்று காத்திருக்கிறார்களே தவிர நம்முடைய கடமை என்ன? பங்கு என்ன? என்பது தொடர்பாக அவர்கள் யாரும் சிந்திக்க கூட தயாராக இல்லை. மாணவர்கள் ஏன் ஆட்சியினை கைப்பற்ற தீர்மானிக்கக்கூடாது..? ஒரு கல்லூரி மாணவன் ஏன் முதலமைச்சர் ஆகக் கூடாது? அணைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் ஏன் எம்.ஏ., எம்.பீல்., பி.ஹெச்டி., படித்தவர்களாக இருக்க கூடாது? கேட்பதற்கு சினிமாக் கதை போல் இருக்கலாம். நடைமுறைக்கு சாத்தியமா எனவும் தோன்றலாம். சாத்தியம்தான். உதாரணங்கள் இல்லாமல் இல்லை.
1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் நிகழ்த்த மொழிப்போர் போராட்டத்தை நினைத்துப் பாருங்கள். அன்று நடந்த மாணவப் போராட்டம் கண்டு, சாஸ்திரியின் அரசு கட்டாய இந்தி ஆட்சி மொழியை திணிக்க இருந்த சட்டத்தை திரும்பப் பெற்றது. அதன் விளைவு எத்தகையது தெரியுமா? அடுத்து நடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வாகை சூடியது. இந்தி மொழி போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாணவர் தலைவர் சீனிவாசன், 1967 தேர்தலில் கிங்மேக்கரான காமராஜரை, அவரது சொந்த ஊரான விருதுநகரிலேயே தோற்கடித்த அதிசயம் நிகழ்ந்தது. சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டிப் போட்டது தமிழக இளம் சிங்கப்படை.

‘அரசியல்’ பள்ளிக்கூடம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், குடுமியான் மலை அருகே உள்ள மரிங்கிப்பட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் 35 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆண்டு தோறும் இங்கு மாணவர் தேர்தல் நடத்தப்படுகிறது உள்துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என 7 அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மாணவர்கள் ஒட்டுப் போட்டு இவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். முன்னதாக, போட்டியிடும் மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பறைக்கு சென்று பிரச்சாரமும் செய்கின்றனர்.

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் அத்தனை மாநிலங்களிலும் உள்ள அமைச்சர்களில் பெரும்பாலான பேர் பட்டப்படிப்பு கூட படித்ததில்லை. அவர்கள் வகிக்கும் துறை பற்றி கூட அவர்களுக்கு முழுமையாகத் தெரியாது. எந்தப் புதுமையும் அவர்களுக்கு தெரியாது… தெரியாது… தெரியாது… இன்னும் எத்தனை காலம் இவர்களின் பிடியில் இந்தியா வாழ்வது? ஏதுமறியா அப்பாவி ஜனங்கள் என்றைக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் காண்பது? யோசிக்க வேண்டாமா மாணவ சமுதாயம்…!
மாணவர்களை அரசியலில் இருந்து ஒதுங்கச் செய்வது எது..? ஏன் அவர்கள் ஒன்றுபட்டு திரள மறுக்கிறார்கள்..?

முதல் காரணம் ஈகோ…! டிப்ளமா பயிலும் மாணவர்களுக்கு கலைக் கல்லூரி மாணவர்கள் மீதும், கலைக் கல்லூரி மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கல்லுரி மாணவர்களிடமும், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி, சட்ட கல்லூரி மாணவர்களிடமும் பொறாமை உணர்வு இருக்கிறது. உண்மை கசக்கும். இதுவும் அப்படிப்பட்ட கசப்பான உண்மையே. சிம்பிளாகச் சொல்லவேண்டுமானால் ‘அவனுங்க நடத்தும் போராட்டுத்துக்கு நாம் போவதா?’ என்பதுதான் .

இரண்டாவது சுயநலம்…! தனக்கு ஒன்றும் ஆகக் கூடாது என்ற சுயநலம். நான், என் குடும்பம் என இருக்கும் குணம். அரசியலில் குதித்தால் போராட வேண்டும். அரசாங்கத்தின் அடக்கு முறைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்ற தனிப்பட்ட பயமும், சுயநலனும்..!

மூன்றாவது வளர்ப்பு…! பிறப்பு – படிப்பு-பணம் சம்பாதிப்பு – இறப்பு என வரையறை போட்டு வளர்கிறது இந்த சமூகம். குழந்தை வளர்ப்பில் அனைத்து பெற்றோரும் இதையே பின்பற்றுகிறார்கள். இதற்கு பெற்றோர் மீதும் குறை கூற முடியாது. காரணம், அவர்கள் தன பிள்ளை நலமாக இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.

நான்காவது சாதி..! யார் மறுத்தாலும் இது மறைக்க முடியாத உண்மை.தமிழகத்தின் ஏழு கோடி மக்களையும் பிரித்து கூறு போட்டிருக்கிறது சாதி. எந்த கலப்படமே இல்லாத மாணவ நட்பிலும் இந்த கலப்படம் ஊடுருவி இருக்கிறது.

ஐந்தாவது கல்வி முறை..! ஆங்கிலேயன் கண்டு பொறாமை கொண்டது அக்கால இந்திய கல்விமுறை. அந்த கல்விமுறையின் முதுகெலும்பை உடைக்க ‘மெக்கேலே’ என்பவனால் திணிக்கப் பட்டதுதான் இப்பொழுது இருக்கும் கல்வி முறை… மாணவ சமுதாயத்தின் அரசியல் பார்வை குருடாக்கப்படுவது இந்தக் கல்வி முறையால்தான். ஏனோ இங்கு அரசியல் பாடம் பற்றி மட்டும் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.

ஆறாவது ஈர்ப்பு..! சினிமா, கைபேசி, முகநூல், வாட்ஸ்அப் போன்றவை மீது சமீப காலத்தில் மாணவர்களுக்கு இருக்கும் ஆதீத மோகம்,. இப்போது பெரும்பாலான மாணவர்களுக்கு இதுதான் உலகமாகவே இருக்கிறது.

ஏழாவது தலைமை பண்பு..! ஒருவர் செல்லும் அதே பாதையையே, தங்களது பாதையாகவும் தேர்வுசெய்வது பொதுவான மனித குணம். அது எந்த பாதை? என்று இவர்கள் கவலைப்படுவது இல்லை. சுருக்கமாக தங்களுக்கான தலைவன் யார் என்பதை இவர்களால் அறிய முடியவில்லை.

அண்ணா மாணவர்களின் தலைவனாய் திகழ்ந்தார். ஒர் சிறந்த வழிகாட்டியாய் திகழ்ந்தார். மொழிப் போரில் பேராசிரியர் இலக்குவனார் மாணவர்களுக்கு ஓர் வழிகாட்டியாய் இருந்தார். கோடான கோடி தமிழர்கள் இருக்கையில், பிரபாகரன் என்ற ஒருவர்தான் ஈழ மக்களின் விடியலாய் வந்தார். மாணவர்கள் தலைவராக மாறுவதற்கு, ஆட்சி அதிகாரத்தினைக் கையில் கொண்டு வருவதற்கு மேலே உள்ள ஏழு காரணங்களுக்கு சரியான முடிவு காண்பதுதான்.

முகநூலில் மாணவர்களுக்கு என ஓர் தனி பக்கம் உருவாக்கி, அரசியல் பார்வையுள்ள மாணவர்கள், அதன் மூலம் தங்களுக்கு தெரிந்தவற்றை பதிவு செய்தல், ஆரோக்கியமான விவாதங்கள் நடத்துவது, ஒற்றுமையாக இருத்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். மேலும் கல்லூரிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு அரசியல் வகுப்புகள் எடுக்க வேண்டும். இதை இன்று ஓர் விதையாய் விதைத்தால் பின் மரமாக வளரும்.

மாற்றம் என்பது நம்மிடம்தான் ஆரம்பிக்கவேண்டும். மாணவர்களால் அரசியலில் சாதிக்க முடியாது என்ற எண்ணத்தை குப்பையில் போடுங்கள். குப்பையாக இருக்கும் இந்த அரசியலைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வதில் 100-க்கு 100 மதிப்பெண் பெறுங்கள். உங்களால் நாடு வளமும், வல்லமையும் பெறட்டும். அது கரை படியாத உங்கள் கரங்களால் மட்டுமே முடியும். காத்துக் கிடக்கிறது இந்திய தேசம்.

Leave your comment
Comment
Name
Email