‘ஊர்வாசனை..!’

Share this

‘ மாயவரம் மக்களின் காலடியில் நின்று கேட்கிறேன்…’

பொங்கித்தீர்த்த மகாத்மா காந்தி!

70க்கும் மேற்பட்ட நாடுகள் அவருக்கு முக்கியமான இடங்களில் சிலை வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. 120க்கும் மேற்பட்ட நாடுகள் அவருக்கு சிறப்பு ஆஞ்சல்தலைகளை வெளியிட்டு இருக்கின்றன . அதிலும் அவர் கடுமையாக எதிர்த்த பிரிட்டன் சொந்த நாட்டவருக்கு மட்டுமே அஞ்சல் தலை வெளியிடுவது என்ற சட்டத்தை திருத்தி, அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது. வாழ்நாளில் ஒருமுறைகூட அவர் சென்றிராத அமெரிக்காவிலே அவருக்கு 40க்கும் அதிகமான இடங்களில் அவருக்கு சிலை வைத்து கொண்டாடுகிறார்கள். அகிம்சை எனும் உன்னத தத்துவத்தை உலகிற்குத் தந்த மகான் என ஆராதிக்கிறார்கள். இத்தனை சிறப்புகள் வாய்ந்த மகாத்மா காந்தி எனும் அந்த மாபெரும் தலைவரை உருவாக்கியதில் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் மிகப்பெரிய பங்குண்டு. அதிலும் கூடுதல் பெருமையும் சிறப்பும் மயிலாடுதுறைக்கு உண்டு.

விடுதலைக்குப் போராடுவது என்ற முடிவோடு 1915 ஆம் ஆண்டு காந்தி இந்தியாவுக்கு வந்த போது அவர் முதன் முதலில் பார்க்க நினைத்த ஊர் மாயவரத்திற்கு பக்கத்திலுள்ள தில்லையாடி. தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த போது அவருடைய போராட்டங்களுக்குப் பக்கபலமாக இருந்தவர்கள் தமிழர்கள். அதிலும் குறிப்பாக மாயவரம் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள். அங்கே காந்தி நிகழ்த்திய உலகின் முதல் சக்தியாகிரக போராட்டத்தில் தன் இன்னுயிரைக் கொடுத்த முதல் தியாகி சாமி . நாகப்பன். மாயவரம் பகுதியைச் சேர்ந்தவர். அதே போல காந்தியடிகளின் அகிம்சை போருக்கு உத்வேகம் தந்த இளம்பெண் வள்ளியம்மை. தில்லையாடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் இருந்த பல குடும்பங்கள் தாயகம் திரும்பி தில்லையாடியில் வசித்துவந்தார்கள். இந்தியா வந்ததும் அவர்களைப் பார்ப்பதே முதல் வேலை என்று காந்தி நினைக்கும் அளவுக்கு அங்கு நம்ம ஊர் தமிழர்களின் பங்களிப்பு இருந்தது.

1915, ஏப்ரல் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் மனைவி கஸ்தூரிபாயுடன் மாயவரம் ஜங்ஷனில் வந்திறங்கினார் மகாத்மா. மயிலாடுதுறை மண்ணைத் தொட்டு கும்பிட்டுவிட்டு, நகரசபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரட்டைக் குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏறினார். ஊர்வலமாக நகராட்சி பள்ளிக்கூட மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட காந்தி, அங்கிருந்து வண்டியிலேயே தரங்கம்பாடிக்குச் சென்றார். வழியில் செம்பனார்கோவிலில் அவருக்குப் பொதுமக்களின் சார்பில் வரவேற்பும், விருந்தும் அளிக்கப்பட்டது.

காந்தி நிகழ்த்திய உலகின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் தன் இன்னுயிரைக் கொடுத்த முதல் தியாகி சாமி. நாகப்பன். மாயவரம் பகுதியைச் சேர்ந்தவர். அதே போல் காந்தியடிகளின் அகிம்சை போருக்கு உத்வேகம் தந்த இளம்பெண் வள்ளியம்மை. தில்லையாடியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

தரங்கம்பாடி கோட்டை மைதானத்தில் பேண்டு வாத்தியம் முழங்க காந்தியை வரவேற்றார்கள். தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் களத்தில் நின்ற 200 சாத்தியாகிரகிகள் அங்கே இருந்தனர். இரவு தரங்கம்பாடி கோட்டை வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட காந்தி தம்பதியருக்கு நுங்கு, இளநீர், வேர்க்கடலை, பழங்கள் ஆகியவை இரவு விருந்தில் கொடுக்கப்பட்டன. பஞ்சமர்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் வாழ்வுரிமைக்காக காந்தியடிகளிடம் மனு கொடுத்தார்கள். தரங்கம்பாடி கோட்டையில் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் காலை தில்லையாடி சென்றார். அங்கு தென்னாப்பிரிக்க சத்தியாகிரக தியாகி சுப்ரமணிய ஆச்சாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காந்தி சந்தித்தார். தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகத்தில் ஆங்கிலேயரால் சுட்டுக்கொல்லப்பட்ட செல்வன் என்பவரது மனைவி மற்றும் குடும்பத்தாரைப் பார்த்தார். செல்வனின் மகன் நாய்க்கரை தன்னோடு அழைத்துச் செல்ல காந்தி விரும்பினார். ஆனால் அதற்கு செல்வனின் மனைவி மறுத்தார். அவரிடம் நீண்ட நேரம் மன்றாடி செல்வனின் மகனைத் தன்னோடு அழைத்துக் கொண்டு, மாயவரம் வந்து சேர்ந்தார்.

1915, மே 1 ஆம் தேதி அங்கு நகராட்சியின் விக்டோரியா மண்டபத்தில் அவருக்கு நகரசபையின் சார்பில் முறைப்படியான வரவேற்பு கொடுக்கப்பட்டது. நகராட்சித் தலைவர் எம்.எஸ். நடேச அய்யர் வரவேற்பு மடலை வாசித்து அளித்தார். அதன்பிறகு காந்தியடிகள் ஆற்றிய உரைதான், இந்திய மக்களின் மனம் கவர்ந்த தலைவராக, இந்த நாட்டுக்கு விடுதலை வாங்கித் தருவதற்கு வித்திட்டது. தீண்டாமை ஒழிப்பு, தாய் மொழியைக் கொண்டாடுதல், வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து கைத்தறி ஆடை அணிதல் எனும் மூன்று முக்கியமான கொள்கைப் பிரகடனங்களை மயிலாடுதுறை மண்ணில் நின்று கொண்டுதான் காந்தி முதல் முறையாக அறிவித்தார். அவர் முதலில் கைக்கொண்டது தீண்டாமை ஒழிப்பு. மிகக்கடுமையாக இருந்த அவரது பேச்சின் சில வரிகள் இதோ…

“தரங்கம்பாடியில் பஞ்சம சகோதரர்களின் வரவேற்பு ஒன்றைத் தற்செயலாக நான் பெற்றேன். ‘குடிதண்ணீர் வசதி இல்லை. வாழ்க்கை வசதிகள் இல்லை. நிலம் வாங்க, விற்க முடியவில்லை. நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியவில்லை’ என்றெல்லாம் அவர்கள் தெரிவித்தனர். இவ்வித நிலைமை ஏற்படுவதற்கு யார் பொறுப்பு? இந்நிலைமை நீடிக்க நாம் அனுமதிக்கலாமா? ‘பண்டிதனுக்கும் பாமரனுக்கும் எவன் வேறுபாடு பாராட்டுவது இல்லையோ அவனே உண்மையான பிராமணன்’ என்று பகவத் கீதை கூறுகிறது. மாயவரத்தில் பிராமணர்கள் தங்களையும் பறையர்களை சம நோக்குடன் பார்க்கிறார்களா? மாயவரத்தில் பிராமணர்கள் தங்களையும் பஞ்சம சகோதரர்களிடம் சமமாகப் பழகினால் மற்ற வகுப்பினர் அவர்களைப் பின்பற்ற மாட்டேன் என்று சொல்வார்களா? மாயவரம் மக்களின் காலடியில் நின்று நான் கேட்கிறேன். வீடு வாசல் இல்லாதவர்களை விரட்டி அடிப்பது தானா தேசியம்?” – இப்படி காந்தி பொங்கிய போது மொத்த சபையும் விக்கித்துப் போனது. அடுத்து அவர் தொட்டது தாய் மொழிப்பற்று.

“நீங்கள் உங்களுடைய வரவேற்பு உரையை ஆங்கிலத்தில் அச்சிட்டு இருக்கிறீர்கள். ஆகவே, உண்மையிலேயே நீங்கள் சுதேசியைக் கடைபிடிக்கவில்லை. ஆங்கிலத்தின் மீது எனக்கு வெறுப்பு கிடையாது. ஆனாலும் தாய் மொழியைக் கொன்றுவிட்டு அதன் மீது ஆங்கில மொழியை வளர்த்தீர்களானால், நீங்கள் சரியான முறையில் தேசியத்தை கடைப் பிடிக்கவில்லை என்பது தான் பொருள். எனக்கு தமிழ் தெரியாது என்று நீங்கள் எண்ணினால், ஒன்று தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் அல்லது உங்களுடைய வரப்பேற்புரையை அந்த அழகான (தமிழ்) மொழியில் எழுதி, அதை எனக்கு மொழி பெயர்த்து கூறவேண்டும்” – தாய்மொழிக்கான முக்கியத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்ற முழக்கத்திற்குப் பிறகு கைத்தறி ஆடைகளைப் பற்றி காந்தி பேசினார்.

“மாயவரத்தில் 50 கைத்தறிகள் இயங்குவதாகவும், அவை சேலைகள் உற்பத்தி செய்து கொண்டு இருப்பதாகவும் கூறினார்கள். நம்முடைய சுதேசி என்பது மாதர்களுக்கு மட்டும்தானா? ஆண் நண்பர்கள் உடுத்தியிருக்கும் துணியைப் பார்த்தால் அவர்கள் இங்கு உற்பத்தியான துணியை அணியவில்லை என்று தெரிகிறது. (கூட்டத்திலிருந்து ஒரு குரல்: இங்கு ஆயிரம் தரிகள் இருக்கின்றன). அப்படியானால் இன்னும் மோசம். இந்த ஆயிரம் கைத்தறிகளும் இயங்கி அவர்களின் தேவைகளும் உங்களுடைய தேவைகளும் நிறைவு செய்யப் பட்டால் இந்தியாவில் ஏழ்மையே இருக்காதே. நீங்களும் தலைவர் அவர்களும் உங்களுடைய துணி தேவைக்கு எந்த அளவு வெளிநாட்டு துணிகளை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன். அதிக செலவில்லாமல் சுதேசி துணிகளைக் கொண்டு துணி தேவையை நிறைவு செய்துகொள்ள முடியும் என்பதை நான் அறிவேன்”.

 

விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்த ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான இம்மூன்று வரலாற்றுப் பிரகடனங்களையும் மயிலாடுதுறை மண்ணில் இருந்தே மகாத்மா முதன்முறையாக செய்தார் என்பதை நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறதல்லவா?

அதன் பிறகு 4 முறை மயிலாடுதுறைக்கு காந்தியடிகள் வந்த போதும்  இப்படியான சரித்திர நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன. காந்தியடிகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல; மயிலாடுதுறையின் வரலாற்றிலும் அவை முக்கியமான நாட்கள். அவை என்ன?

Leave your comment
Comment
Name
Email