அரசு உதவி தொகை நிறுத்தப்பட்டுள்ளதால் 6 மாதமாக திக்குமுக்காடும் மாற்றுத்திறனாளிகள் குடும்பம்

Share this

வறுமையில் வாடும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நிர்வாகம் உதவி செய்து கைதூக்கிவிடக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்து விட்டாலே, அந்தக் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துவிடும். ஆனால் ஒரு குடும்பத்தில் 6 பேருமே மாற்றுத்திறனாளியாக பிறந்து வாழ்ந்து வருவது அரிதாக உள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் 3 அடி உயரமே உடைய மாற்றுத்திறனாளி முரளி(53). இவர் மட்டுமின்றி இவரது குடும்பத்தில் இவரது குடும்பத்தில் வசிக்கும் அனைவருமே மாற்றுத்திறனாளிகள் என்பது உள்ளத்தை உருக வைப்பதாக உள்ளது. இவரது சகோதரர் ரகு (48) 4 அடி உயரமும், சகோதரி லெட்சுமி (45) 4 அடிக்கு சற்று குறைவாகவும் , இளைய சகோதரர் பாலாஜி (35), 3 அடி உயரமும் கொண்ட மாற்றுத்திறனாளிகள். இவர்களது தாயார் வசந்தாவும் (73),இக்குடும்பத்திலேயே சிறுவயது முதல் வசித்து வரும் வசந்தாவின் சகோதரி லெட்சுமி (60) என்பவரும் காது கேட்காத, பேசவும் முடியாத மாற்றுத்திறனாளிகள்.

முரளியின் தந்தை நாராயணன், திருமணஞ்சேரியில் உள்ள பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர். நல்ல உடல் தகுதியுடன் இருந்த இவர் காது கேட்காத, வாய் பேச முடியாத செவிடு ஊமையான தனது அக்காள் மகள் வசந்தாவை 55 ஆண்டுகளுக்கு முன் கருணை உள்ளத்தோடு திருமணம் செய்து கொண்டார். மேலும் வசந்தாவின் சகோதரி லெட்சுமியையும் தன் குடும்பத்தில் சேர்த்து பராமரித்து வந்தார்.

கருணை உள்ளம் கொண்ட நாராயணின் வாழ்க்கையில் இயற்கை கருணை காட்டவில்லை. 4 குழந்தைகளுமே மாற்றுத்திறனாளிகளாக பிறந்தது நாராயணின் வாழ்க்கையில் தீராத சோகத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், தான் வாழ்ந்த வரையில் தனது குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்காமல், கண்ணை இமை காப்பது போல காப்பாற்றி வந்தார் நாராயணன்.
மேலும் தனது ஒரே பெண்ணான லெட்சுமிக்கும் திருமணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் சோதனை மேல் சோதனையாக பாலாஜி நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக்குழுவில் இருந்த உறுப்பினர்கள் சரிவர பணம் கட்டாத காரணத்தால், அக்கடன் தொகைக்காக அக்குழுவின் தலைவரான பாலாஜி மற்றும் உறுப்பினர்கள் வசந்தா, லெட்சுமி ஆகிய 3 பேரின் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை 6 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளது வங்கி நிர்வாகம். உதவித்தொகையை வைத்து 2 வேலை உணவு சாப்பிட்டு வந்த இக்குடும்பத்தினர் தற்போது ஒருவேளை உணவுக்கே சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது ரகு மட்டும் சிறு சிறு வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். சகோதரர்கள் 3 பேரும் பத்தாம் வகுப்பு படித்துள்ளனர்.

தங்களில் யாரேனும் ஒருவருக்காவது அரசு வேலை ஏற்படுத்திக் கொடுத்தால் தங்கள் குடும்பம் தலை நிமிர்ந்துவிடும் என்ற ஏக்கக் கனவுடன் உள்ளனர் இந்த மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர். கைகொடுக்க முன்வருமா நாகை மாவட்ட நிர்வாகம்.

Leave your comment
Comment
Name
Email