உதயமாகிறது மயிலாடுதுறை மாவட்டம்? மக்கள் எழுச்சியால் அரசின் கவனத்தை ஈர்த்த பேரணி, ஆர்ப்பாட்டம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் : அமைச்சர், எம்.எல்.ஏ உறுதி

Share this

மயிலாடுதுறை மாவட்ட தலைநகர் ஆவதற்கான அனைத்து தகுதிகள் இருந்தும் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை கண்டுகொள்ளாத தமிழக அரசு தற்போது பல்வேறு புதிய மாவட்டங்களை உருவாக்கி வருகிறது. அரசின் இந்த அறிவிப்புகளால் ஏமாற்றமடைந்தனர் மயிலாடுதுறை வருவாய் கோட்டப்பகுதி மக்கள்.
மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வலியுறுத்தியும், இப்பகுதி மக்களின் நியாமான கோரிக்கையையும், தேவையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் மயிலாடுதுறை மாவட்ட அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது.

வணிகர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், காவிரி அமைப்பினர், ரோட்டரி, லயன்ஸ், ஜேசீஸ், உள்ளிட்ட சேவை அமைப்பினர், மூத்த குடிமக்கள் அவையினர், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர், பல் மருத்துவக் கழகத்தினர், ஆதி சங்கரர் பேரவையினர், தமிழக தராசு விற்பனையாளர்கள் சங்கத்தினர், நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தினர், புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தினர், ஹயர் குட்ஸ் சங்கத்ததினர், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்றோர் சங்கத்தினர், தமிழ் சங்கத்தினர், பொது தொழிலாளர் நல சங்கத்தினர், மீனவர் சங்கத்தினர், மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தினர், ஆன்மீகப் பேரவையினர், ஜெயின் சங்கத்தினர், இளையோர் இயக்கத்தினர், உலகத்தமிழ் கவிஞர் பேரவையினர், இளம் சிறகு அறக்கட்டளையினர், இரயில் பயணிகள் சங்கத்தினர், நடைபயிற்சியாளர் சங்கத்தினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மற்றும் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளை ஒன்றிணைத்து மயிலாடுதுறை மாவட்ட அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட அமைப்புக்குழு சார்பில் கடையடைப்பு போராட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு, மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம், துண்டு பிரசுரம் விநியோகம், முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம், தெருமுனைப் பிரச்சாரம், பிரச்சார பயணம், கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டக் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு முழுவீச்சில் கொண்டு செல்லும் நோக்கில் மாவட்ட அமைப்புக் குழு சார்பில் நான்கு திசைகளிலிருந்தும் நடைபயண பேரணி மற்றும் வாகன பேரணி மற்றும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குத்தாலம், வைத்தீஸ்வரன் கோவில், செம்பனார்கோயில், மங்கைநல்லூர் ஆகிய நான்கு பகுதிகளிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வாகன பேரணி மற்றும் நடைபயண பேரணி நடைபெற்றது.

வைத்தீஸ்வரன் கோவிலில் தொடங்கிய பேரணிக்கு மாவட்ட அமைப்புக்குழு தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புக்குழுவைச் சார்ந்த பூம்புகார் சங்கர், ரவிச்சந்திரன், பாண்டுரெங்கன், சிவலிங்கம், ஜெயக்குமார், பொதுத்தொழிலாளர் சங்கத் தலைவர் ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர்.

குத்தாலத்தில் காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன் தலைமையில் நாட்டுப்புற கலைஞர்களின் மேள தாள முழக்கத்துடன், இளைஞர்களின் உணர்வுமிக்க அணிவகுப்புடன் மயிலாடுதுறையை நோக்கி வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் சேயோன், ஆதி சங்கரர் பேரவை தலைவர் இரா.பாண்டியன், குத்தாலம் வணிகர் சங்கத் தலைவர் செல்வம், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க நிர்வாகி நடராஜ் குருக்கள், திருவாலங்காடு வணிகர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

இதே போல மங்கைநல்லூரில் நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட அமைப்புக்குழு துணை ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமை வகித்தார். தமிழ்சசங்கத் தலைவர் பவுல்ராஜ், விவசாய சங்கத்தைச் சார்ந்த கோபி கணேசன், அமைப்புக்குழுவைச் சார்ந்த முகம்மது அலி, சுகுமார், முகம்மது சித்திக் உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செம்பனார்கோவிலில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட செயலாளர் நவநீதன் தலைமை வகித்தார். இதில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம், வணிகர் சங்க பேரவையின் மாவட்ட செயலாளர் பாலையா, வர்த்தக சங்கத் தலைவர்கள் ஞானசேகரன், பாலு மற்றும் சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் அணிதிரண்டு மயிலாடுதுறையை நோக்கி வந்தனர்.

இதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் மாவட்டத் தேவைக்கான காரணங்களையும், இப்பகுதி மக்கள் படும் சிரமங்களையும் எடுத்துக்கூறி உரையாற்றினர். மேலும் மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். ஆர்பாட்டத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வருக்கான கோரிக்கை மனுவை மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் கண்மணியிடம் மாவட்ட அமைப்புக் குழுவினர் வழங்கினர்.

மாவட்ட கோரிக்கை தொடர்பான ஆரம்ப காலகட்டத்திலேயை காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன் மயிலாடுதுறையை தனி மாவட்டம் ஆக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை மனுவை முதல்வருக்கு அனுப்பியிருந்தார். தொடர்ந்து காவிரி அமைப்பின் சார்பில் www.mayiladuthuraidistrict.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டு இதன் மூலம் தனிமாவட்டம் கேட்டு கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து இணையத்தில் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நகல்களும் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் அலுவலகத்தில்
இருந்து பதில் வந்துள்ளது. அதில் நிச்சயம் மயிலாடுதுறை மாவட்டம் தொடர்பான தங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கேட்டு கடந்த 25 ஆண்டு காலமாக நடத்தி வந்த மக்கள் போராட்டத்திற்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டதாகவே தெரிகிறது. போராட்டங்களின் எதிரொலியாக பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இதற்காக குரல் கொடுத்துள்ளனர்.

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறையை மாவட்டமாக்குவதற்கு அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் ‘மயிலாடுதுறை மக்களின் தனி மாவட்ட கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள், 241 ஊராட்சிகள், 288 வருவாய் கிராமங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும்’என்றார்.

தனி மாவட்டம் குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் “நாகை மாவட்டத்தின் நிலப்பரப்பு புதுவை யூனியன் பிரதேசமான காரைக்கால் வரை பரந்து கிடக்கிறது. மயிலாடுதுறை உள்ளிட்ட பல பகுதியினர் நாகப்பட்டினம் செல்ல வேண்டுமானல் அவர்கள் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியது இருக்கிறது. ஆகவே இதனை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை மக்களின் கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசீலிக்கவேண்டும்”எனக் குறிப்பிட்டிருந்தார்.

மயிலாடுதுறை திமுக பாராளுமன்ற உறுப்பினரான ராமலிங்கம் குறிப்பிடும் போது ‘தமிழகத்தில் ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியும் ஒவ்வொரு மாவட்டமாக்கப் பட வேண்டும். ஆந்திராவில் இந்த முறையை நடைமுறைப் படுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் நல்ல நிர்வாகத்தை வழங்க முடியும். அந்த வகையில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக்கப் பட வேண்டும்”என்றார்.

இதனிடயே மயிலாடுதுறையில் நடைபெற்ற விழா ஒன்றில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாவட்ட அமைச்சரும், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் கூறும்போது ‘மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக வருகிற ஆண்டு தமிழக முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார்’ என்றார். இதே போல தமிழக அமைச்சர்களான ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் குறிப்பிடும் போது ‘தனி மாவட்டம் கேட்கும் மயிலாடுதுறை மக்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளனர்.

மயிலாடுதுறை தனி மாவட்டம் குறித்து தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனித நேயக் கட்சித் தலைவர் ஜவஹிருல்லா, தமிழக கட்டிட தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பொன்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாவட்ட கோரிக்கைக்கு ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளனர். இதேபோன்று மாவட்ட கோரிக்கைக்கு ஆதரவாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர், விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளனர். மக்கள் மசோதா கட்சியினர் வருவாய் கோட்டம் முழுவதும் தொடர் கையெழுத்து இயக்க பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர் நல சங்க கூட்டம், தவ்ஹீத் ஜமா அத் நாகை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பா.ஜ.க. ஆலோசனை கூட்டம், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டுக் கூட்டம் ஆகிய கூட்டங்களில் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அரசு அறிவிக்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி மயிலாடுதுறை வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், முதன்மை சார்பு நீதிபதியுமான கவுதமனிடம் மனு அளித்து, மாவட்ட கோரிக்கைக்கு ஆதரவாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாவட்டத் தலைவர் பண்ணை சொக்கலிங்கம் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்துள்ளார். இதுபோன்று மயிலாடுதுறையை மாவட்டமாக்க பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வ இயக்கத்தைச் சார்ந்தவர்களும் போராட்டங்கள் நடத்தி ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் குறிப்பிடும் போது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பாரதி ஆகியோருடன் நானும் சேர்ந்து முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினோம். தமிழக ஆறுகளை தூர் வார முதல்வர் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டினோம். பின்னர் மயிலாடுதுறையை தனி மாவட்டம் ஆக்குவது தொடர்பாக கோரிக்கை வைத்தோம். கனிவுடன் கேட்ட முதல்வர் இன்னும் ஒரிரு மாதங்களில் இந்த கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும் என தெரிவித்ததாக கூறியுள்ளார்.

ஒரு வழியாக மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால கோரிக்கை முதலமைச்சரின் காதுகளை எட்டி, இதயத்தையும் தொட்டு விட்டது. கால் நூற்றாண்டு கால மக்களின் நியமான கோரிக்கையை ஏற்று, இனியும் காலம் தாழ்த்தாமல், மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave your comment
Comment
Name
Email