மயிலாடுதுறையில் மக்களை மிரட்டும் பாதாள சாக்கடை திட்டம்: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

Share this

மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கிய போது மகிழ்ச்சியடைந்த மக்கள் தற்போது நகரின் பல்வேறு இடங்களில் ஏற்படும் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு, அதனால் ஏற்படும் மிகப்பெரிய பள்ளங்கள், சாலைகளில் ஓடும் கழிவுநீரால் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுநோய் பரவும்  ஆபத்து,போக்குவரத்து நெரிசல், துர்நாற்றம் வீசும் அவலம் போன்ற பிரச்சனைகளால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நாளுக்கு நாள் மக்களை பாடாய்படுத்தி வரும் பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு பணிகளை உடனடியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறையில் காவிரி ஆறு மற்றும் பழங்காவிரியில் பொதுமக்களால் சாக்கடை நீர் விடப்பட்டு வந்த நிலையில் இதற்கு தீர்வுகாண வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து (1996 – 2001) திமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு நிதி  ரூ.42 கோடி திட்ட மதிப்பீட்டில் மயிலாடுதுறைபாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு 2003 – ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்பார்வையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் நடைபெற்ற மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடக்கத்திலேயே பல்வேறு சர்ச்சைக்கு உள்ளானது. ஆரம்ப கட்ட பணிகளில் உள்ள குறைபாடுகளை களைய பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. 2006-ஆம் ஆண்டு பணிகள் முடிவடைந்து நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இத்திட்டத்தில் 2009 – ஆம் ஆண்டு முதலே ஆள்நுழைவு தொட்டிகளில் இருந்து கழிவு நீர்வெளியேறுவது, தொட்டிகள் இடிந்து விழுவது, கழிவு நீர் குழாயில் அடைப்பு மற்றும் உடைப்புகள் ஏற்படுவது என பல்வேறு பிரச்சனைகள் தொடங்கியது.இதனால் பாதாள சாக்கடை திட்டத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் மற்றும் ஆள்நுழைவு தொட்டிகள் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என 2009 – ஆம் ஆண்டு பொதுநல அமைப்புகள் சார்பில் மயிலாடுதுறை சார் ஆட்சியர் அஜய் யாதவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இதையடுத்து அவரது தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய செயல்பாடுகள் முறையாக இல்லையென்றும், தொழில் நுட்பவியலாளர்கள் இன்றி சாதாரண தொழிலாளர்களை கொண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி, இதற்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டு, அரசுக்கு கடிதமும் எழுதினார். இதற்கிடையில் சார் ஆட்சியர் பணி மாறுதல் ஆனதால் மறு ஆய்வு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

மயிலாடுதுறை பாதாள சாக்கடைத் திட்டம் 2012 – ஆம் ஆண்டு வரை குடிநீர் வடிகால் வாரியமும், 2012 – ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தனியார் பராமரிப்பிலும் செயல்பட்டுக் கொண்டு உள்ளது. 3406 ஆள் நுழைவு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. 8 கழிவு நீரேற்று நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 68 கி.மீ தூரத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு மயிலாடுதுறையை அடுத்துள்ள ஆறுபாதி கிராமத்தில் 32 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்டு புல் வளர்க்கவும், விவசாயத்திற்குபயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் சத்யவான் வாய்க்காலில் விடப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த ஆண்டு கச்சேரி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஏற்பட்ட பெரும் பள்ளத்தால் பாதாள சாக்கடை குழாயிலிருந்து கழிவுநீர் வெளியேறியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, நகரில் உள்ள அணைத்து நீரேற்று நிலையங்களிலும் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த கழிவுநீரும் பழங்காவிரியில் விடப்பட்டு குழாயை சரிசெய்யும் பணி நடைபெற்றது. சுமார் ஒருமாத காலம் பணிகள் நடைபெற்று சீரமைக்கப்பட்டதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதே போன்று சில மாதங்களாக மயிலாடுதுறை நகர் பகுதியில் முக்கிய சாலைகளில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களில் பத்துமுறை உடைப்பு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் ஏற்பட்ட பள்ளங்கள் ஒரு புறமிருக்க, நகர் முழுவதும் உள்ள ஆள் நுழைவுத் தொட்டி மூடிகள் உடைந்தும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும் கழிவு நீர் வெளியேறி வரும் அவலமும் நீடித்து வருகிறது.

மயிலாடுதுறை நகர் சாலைகளில் இதுவரை பத்து முறை பாதாள சாக்கடை குழாய்களின் உடைப்பால் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யவே படாதபாடு பட்டுவந்த அதிகாரிகளுக்கு சவாலாக கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி தரங்கை சாலையில் உள்ள கொத்தத்தெரு பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு சாலை உள்வாங்கி உள்ளது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாயூரநாதசுவாமி கோவில் கீழ்மாடவிளாகம் பகுதியில் கடந்த வாரம் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு கோவில் திருக்குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி வழியாக கழிவுநீர் புகுந்ததால் பக்தர்கள் புனித நீராட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் குளத்தை தூய்மைப்படுத்தி புதிதாக நீர் நிரப்ப வேண்டுமென  பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது போன்று நாளுக்கு நாள் பாதாள சாக்கடையால் ஆங்காங்கே ஏற்படும் தொடர் பாதிப்புகளால் மயிலாடுதுறை பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். பாதாள சாக்கடைத்திட்ட பராமரிப்பு பணிகளை முறையாக செய்ய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுத்தபாடில்லை.

பாதாள  சாக்கடை குழாய்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட அந்தந்தப்பகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.பருவ மழைக்காலம் தொடங்குவதற்குள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை நகரில் நிலவி வரும் அவளை நிலையை மாற்றிட இனியும் காலம் தாழ்த்தாமல் நகர் முழுவதும் பாதாள சாக்கடையை மறுசீரமைப்பு செய்ய தேவைப்படும் தொகையை கணக்கிட்டு அதனை நகராட்சிகள் நிர்வாக ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான அனுமதி பெற்று, பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து சீரமைக்க வேண்டும் என்பதே மக்களின் அவசர கோரிக்கையாக உள்ளது.

 

உதயமாகிறது மயிலாடுதுறை மாவட்டம்? மக்கள் எழுச்சியால் அரசின் கவனத்தை ஈர்த்த பேரணி, ஆர்ப்பாட்டம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் : அமைச்சர், எம்.எல்.ஏ உறுதி
மயிலாடுதுறை பகுதிகளில் 24-09-19 (செவ்வாய்) அன்று மின்தடை
Leave your comment
Comment
Name
Email