5th August 2020

கஜா புயல் பாதித்த விவசாயிகளுக்கு வருமானத்தைப் பெருக்க தேனீ வளர்ப்புப் பயிற்சி

காரைக்காலில் இயங்கி வரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் முன்மாதிரி தேனீ விவசாயி இணைந்து தலைஞாயிறு தாலுகாவில் உள்ள கோவில்பத்து கிராமத்தில் முற்பகலிலும் மற்றும் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கத்தரிப்புலம் கிராமத்தில் மாலையிலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்புக் குறித்து பயிற்சி அளித்தனர்.

அக்கல்லூரியின் மாணவ மாணவியர்கள் அக்கிராமங்களில் கடந்த 7-ஆம் தேதி முதல் களப்பணிகள் செய்து வருகின்றனர். புயலின் தாக்கத்தால் முந்திரி, மா, தென்னை, சவுக்கு போன்ற பணப் பயிர்களை பல விவசாயிகள் இழந்தனர். மறுபடியும் அப்பயிர்களின் கன்றுகளை நடவு செய்து வருகின்றனர். ஆனால், அவை பலன் தர பல வருடங்கள் ஆகும். மேலும், பலருக்கு இன்னும் கன்றுகள் கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து நிலையான வருமானம் இல்லாமல் தவிப்பதாக மாணவ மாணவியரிடம் அந்த விவசாயிகள் தெரிவித்தனர்.

மாணவ மாணவியர்களிடம் பகிர்ந்த அந்த பிரச்சனையின் அடிப்படையில் அவர்களின் ஆசிரியரான டாக்டர் எஸ். ஆனந்த்குமார், பயிர் அல்லாத மாற்று உபத் தொழிலான தேனீ வளர்ப்பது குறித்த பயிற்சிக்கான ஏற்பாடு செய்திருந்தார். அக்கல்லூரியின் பூச்சியியல் துறை துணைப் பேராசிரியரான டாக்டர் காண்டீபன் தேனீ வளர்ப்பது குறித்து எடுத்துரைத்தார். முன்மாதிரி தேனீ விவசாயியான காரைக்காலைச் சேர்ந்த வை.கிருஷ்ணன் தனது அனுபவங்களைக் கோவில்பத்து மற்றும் கத்தரிப்புலம் விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டனர். அந்த வேளாண் கல்லூரியின் தோட்டக்கலை துறை துணைப் பேராசிரியர்கள், டாக்டர் மாரிச்சாமி மற்றும் டாக்டர் ஷெர்லி ஆகியோரும் விவசாயிகளுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினர்.

இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் பேசுகையில் இயற்கை தேன் உற்பத்தி செய்து, “சூய் ஜென்ரிஸ்” எனப்படும் சுயச் சான்றிதழ் குழு  அமைத்து, இயற்கை உற்பத்திக்கான சான்றிதழை வெளியில் இருந்து பெற செலவு செய்யாமல், மதிப்பளவுக் குறியீடுகள் (விதிகள்) அடிப்படையில் தணிக்கையை அந்த குழுவே செய்து, மேலும் உரிய உரிமங்கள் பெற்று, இணையத்தில்  விளம்பரம் செய்ய வலைப்பதிவு தளம் ஒன்றை தொடங்கி, அங்கீகரிக்கப்பட்ட தரமான தேனுக்கு பிரீமியம் விலை நிர்ணயம் செய்து விற்றால் கூரியர் வழியாக அந்த நல்லத் தேனை நல்ல விலை கொடுத்து வாங்க பல நுகர்வோர் விருப்பமுடன் உள்ளனர். அத்தகைய மேம்பட்ட விற்பனைத் திறனை நம் விவசாயிகள் கூட்டாக சேர்ந்து செய்து பயன் அடையலாம் என்றார்.

நிகழ்ச்சிக்கான பணிகளை மாணவியரான சாந்தினி, தனலட்சுமி, மற்றும் மாணவர்களான தர்ஷன் பாலாஜி, கோகுல் மற்ற மாணவ மாணவியரோடு இணைந்து செய்திருந்தனர். பஞ்சநதிக்குளம் கிராமத் தொடக்கப் பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, ரோட்டரி சங்க நிர்வாகியாகக் நிகழிச்சியில் கலந்துகொண்டு சுமார் பத்து விவசாயிகளுக்கு தேனீ வளர்க்கத் தேவையானவற்றை அச்சங்கத்தின் மூலம் நிதித் திரட்டி உதவ முன்வந்தார். நாகப்பட்டினம் தோட்டக்கலை துறை அதிகாரிகளான மணிவண்ணன், செல்வப்பிரியா, கண்ணன், வைரவமூர்த்தி, சிலம்பரசன் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு உரிய வழிகாட்டுதலை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *