தருமபுரம் ஆதீனத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய 27 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

Share this

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, 27 நட்சத்திறங்களுக்குரிய 27 வகை மரக்கன்றுகளை 27 -ஆவது குரு மகா சந்நிதானம் புதன்கிழமை நட்டு வைத்தார்.

மாயூரம் பசுமை பரப்புக தன்னார்வக் குழுமம் சார்பில் தருமபுரம் ஆதின மடவளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதின  27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகளான எட்டி, நெல்லி, அத்தி, நாவல், கருங்காலி, செங்கருங்காலி, மூங்கில், அரசு, புன்னை, ஆல், பலா, அலரி, வேலம் , வில்வம், மருதம், விலா, மகிழம், புராய், மா, வஞ்சி, பலா, எருக்கம் , வன்னி, கடம்பு, தேமா, வேம்பு, இலுப்பை ஆகிய 27 மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

தொடர்ந்து, விழாவில் பேசிய குருமகா சந்நிதானம், ஒரு மனிதன் உயிர்வாழ 6 மரங்கள் தேவை. ஆனால் இந்தியாவில் 120 கோடி மக்களுக்கு 120 கோடி  மரங்கள் கூட இல்லை. மரங்களில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவே இருதய நோய் உள்ளிட்ட பல நோய்கள் மனிதனை தாக்குகின்றன. மூங்கில் போன்ற மரங்களில் அதிக ஆக்ஸிஜன் உள்ளது. இறைவனைப் பற்றி மட்டுமே பாடும் இறையடியாளர்கள் மரங்களைப் பற்றியும் பல பாடல்களைப் பாடியுள்ளனர் என கூறினார்.

மரங்களைப் போற்ற வேண்டும் என்பதற்காகவே, அனைத்துக் கோயில்களிலும் மரங்களை தல விருட்சமாக அமைத்துள்ளனர். ஆவுடையார் கோயிலில் மரமே இறைவனாக உள்ளது. எனவே மரங்களைப் போற்றி வளர்க்க வேண்டும் என்றார் குருமகா சந்நிதானம்.

இந்நிகழ்ச்சியில் மாயூரம் பசுமைப் பரப்புக தன்னார்வக் குழும நிர்வாகிகள் செல்வசாரதன், டி.எஸ்.ஆர், ரமேஷ், ஆறம் செய் சிவா, சங்கர், மணிகண்டன், அருண், சண்முகம், நரேன், கமல் உள்ளிட்ட பலர் பங்கேற்று ஆதின வளாகத்திலும், நான்கு சிவம் பெருக்கும் வீதிகளிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

Leave your comment
Comment
Name
Email