வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

Share this

வரும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு, வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டத்துக்கான வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராம சேயோன் வெளியிட்ட அறிக்கை :

மயிலாடுதுறையை மாவட்டத் தலைநகராக்க வேண்டி, மயிலாடுதுறை உள்கோட்டத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.மயிலாடுதுறையை விட சிறிய உள்கோட்டங்கள் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் மயிலாடுதுறை மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1989 இல் தொடங்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டக் கோரிக்கையானது கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அரசால் நிறைவேற்றப்படவில்லை. மாவட்டங்கள் கேட்காத ஊர்களுக்கெல்லாம் தற்போது தமிழக அரசு புதிய மாவட்டங்களை அறிவித்திருக்கிறது. பூகோள ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அணைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள மயிலாடுதுறை உள்கோட்டம் மட்டும் தொடர்ந்து மாவட்டம் ஆக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எனவே 2019 ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக முதல்வர், மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டுகிறோம் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave your comment
Comment
Name
Email