5th August 2020

தமிழக அரசு உடனடியாக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை

காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த, தமிழக அரசு உடனடியாக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் கூறியது.

சேலம் தலைவாசல் விவசாயிகள் பெருவிழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் என்றும், காவிரிப்படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வரவேற்பதுடன், தமிழக அரசுக்கு நன்றியைப் பதிவு செய்கிறது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிப்பது சிறப்புமிக்கது. உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, தீர்மானம் இயற்றி, இது எங்கள் கொள்கை முடிவு என்று ஓர் அறிவிக்கையை வெளியிட வேண்டும்.

பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கின்ற பட்ஜெட் கூட்டுத் தொடரிலேயே இதற்கான சட்டப்பூர்வ முன்னெடுப்புகளை நிறைவேற்றி, தனிச்சட்டம் இயற்றி தாமதமில்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

எண்ணெய் -எரிவாயு, நிலக்கரி வளம் மிக்க காவிரிப்படுகையில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் முனைப்புக் காட்டும் இச்சூழ்நிலையில், தமிழகத்தின் உணவு உறுதிப்பாட்டையும், தமிழக காவிரிப்படுகை சுற்றுசூழலையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்கும் வகையில் காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதும் உடனடி தேவையாகும்.

காவிரிப்படுகையில் உள்ள இயற்கை எரிவாயு-எண்ணெய் கிணறுகள் அனைத்துமே இனி ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தான் என்று 2018-இல் மத்திய அரசு அறிவித்து விட்டது. ஆகவே, காவிரிபடுகை காப்பாற்றவும், காவிரிபடுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நடைமுறைப்படுத்தவும், காவிரிப்படுகையில் உள்ள அணைத்து எண்ணெய் எரிவாயு கிணறுகளும் மூடப்பட்டு, எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

காவிரிப்படுகையில் நாகை, கடலூர், மாவட்டங்களில் 45 கிராமங்களை உள்ளடக்கி அமைக்க இருக்கிற பெட்ரோகெமிக்கல் மண்டலத்திட்டம் கைவிடப்பட வேண்டும். நரிமணத்தில் ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கின்ற பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கம், தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் அமைக்க இருக்கின்ற பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம், கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடி செலவில் அமைய இருக்கின்ற பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை தேவையற்றதாகும். அவை கைவிடப்பட வேண்டும்.

தமிழக முதல்வர் தான் அறிவித்த அறிவிப்பில் உறுதியாக இருக்க வேண்டும் காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் அறிவிப்பு உடனடியாக அமைச்சரவையின் கொள்கை முடிவாக அறிவிக்கப்பட்டு, தனிச்சட்டம் இயற்றி நடைமுறைப் படுத்தப் பட வேண்டும் என்றார் அவர். காவிரிப்படுகையை பாதுக்காகப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகளில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் முயற்சி:

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி நடத்திய காவிரிப்படுகை முதல் பாதுகாப்பு மாநாட்டில் இது தீர்மானமாக இயற்றப்பட்டது. அதை தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி நடத்திய 2-ஆவது காவிரிப்படுகைப் பாதுகாப்பு மாநாட்டிலிலும், 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடத்திய காவிரிப்படுகை பாதுகாப்பு மூன்றாவது மாநாட்டிலிலும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

2019 காவிரிப்படுக்கை பாதுகாப்பு மயிலாடுதுறை மாநாட்டில், காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில், ஓராண்டு மக்களிடம் கருத்துப் பரவல் செய்து, காவிரிப்படுகையில் கருத்து வாக்கெடுப்பு நடத்தி பிரகடனம் உறுதி செய்யப்படும் என்று மீத்தேன் திட்ட ஏதிர்ப்புக் கூட்டமைப்பு அறிவித்தது. 2014-இல் தஞ்சையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை கூட்டமைப்பு தொடங்கியது. இதுவரை பத்து லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளது.

காவிரிப்படுகையில் பாதுகாப்பு பயணங்கள் பல முன்னெடுக்கப்பட்டன. மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் முன்னெடுப்பில் கிராமசபைத் தீர்மானங்கள் வடிவமைக்கப்பட்டு, ஹைட்ரோகார்பன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் கிராமசபை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானகள் மற்றும் காவிரிப்படுகை பாதுகாப்பு மாநாடுகள் கருத்தரங்குகள் போராட்டக் கூட்டங்கள் ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

செய்தி: ஆகாஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *