234 தொகுதிகளில் 3,998 வேட்பாளர்கள் போட்டி; நாளை இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது


234 தொகுதிகளில் 3,998 வேட்பாளர்கள் போட்டி; நாளை இரவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது: ஸ்டாலின், அமித்ஷாவும் சென்னையில் இறுதிகட்ட பிரசாரம்
4/3/2021 5:12:00 PM
இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் நாங்கள் மட்டும் தோற்கவில்லை: அமெரிக்க பேராசிரியருடன் ராகுல் உரை கொரோனா பாதிப்பில் தமிழகம் உட்பட 11 மாநிலங்களின் நிலைமை மோசம்: விதிகளை கடுமையாக்க மத்திய அரசு அறிவுரை
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான நாளை இரவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமித்ஷா ஆகியோர் சென்னையில் பிரசாரம் செய்கின்றனர். தலைவர்கள் இறுதி கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏப்.6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மே 2ல் தேர்தல் முடிவு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கி மார்ச் 19ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் 6,183 ஆண்கள், 1,069 பெண்கள், 3 திருநங்கைகள் என 7,255 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வேட்பு மனுக்கள் மீது மார்ச் 20ம் தேதி பரிசீலனை நடந்தது. வேட்பு மனுவில் முறையாக பூர்த்தி செய்யாத 2,738 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4,509 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை மார்ச் 21 மற்றும் 22ம் தேதி மாலை 3 மணி வரை வாபஸ் பெற தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. அதன்படி, 250க்கும் மேற்பட்டோர், தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் மாற்று வேட்பாளர்களும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து 234 தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
இதில் 234 தொகுதிகளில் 3,998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். 234 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 6.36 கோடி பேர். ஆண் வாக்காளர்கள் 3.08 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 3.18 கோடி பேரும் உள்ளனர். முதன் முறையாக 8.97 லட்சம் இளைஞர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில், திமுக, அதிமுக, மநீம, அமமுக, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இறுதி கட்ட சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், கி.வீரமணி, டிடிவி.தினகரன்,
கமல், ஜி.கே.வாசன், சீமான் என தலைவர்கள் தொகுதி வாரியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், பிரதமர் மோடி, அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ்கரத் உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூபிடித்தது. தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் பிரசாரம் செய்து வருகின்றனர்.
வன்னியர்களுக்கு அவசர அவசரமாக அறிவிக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு தென் மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படும் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. பிரசாரத்தின் போது முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு எதிராக தென் மாவட்டங்களில் மக்கள் கோஷமிட்டு வருகின்றனர். தோல்வி பயத்தால் அமைச்சர்கள் தங்களது தொகுதியை விட்டு பிற தொகுதிகளுக்கு செல்லாமல் முடங்கியுள்ளனர். இந்நிலையில், ஏப்.4ல் (நாளை ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் இன்றும், நாளையும் இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலையில் வேதாரண்யம் மற்றும் மாலையில் சென்னையிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர், மேச்சேரி, ஓமலூரிலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கன்னியாகுமரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் உதயநிதி ஸ்டாலினும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை பல்வேறு அரசியல் கட்சியினரும் சைக்கிள் பேரணியில் கலந்து கொள்கின்றனர். இதனால் சுட்டெரிக்கும் வெயிலையும் தாண்டி அனல் பறக்கும் பிரசாரம் நடக்கிறது.
வெளியாட்கள் வெளியேற்றம்
தமிழகத்தில் ஏப்.6ல் தேதி தேர்தல் நடக்கிறது. நாளை இரவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி இறுதி கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக, தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு தொகுதிக்கு தொடர்பில்லாத அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : தமிழ் முரசு