5ஜி தொழில்நுட்பம்: சென்னையில் MIMO உற்பத்தியை தொடங்கிய நோக்கியா


உலக நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் மேம்படுத்தி, அதனை மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் நோக்கியா நிறுவனம் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான உபகரணங்கள் உற்பத்தி செய்யும் பணியை தொடங்கியுள்ளது.
5ஜி தொழில்நுட்பத்திற்கான MIMO (Multiple input multiple output) ஐ தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தில் இது மிக முக்கியமானது என கூறுகின்றனர். அதாவது மக்கள்தொகை அதிகம் உள்ள இடங்களில் கூட 5ஜி சேவை சிறப்பாக கிடைப்பதற்கு MIMO மிக அவசியம். இதன் மூலம் இணைய வேகம் சிறப்பாக இருக்கும். இந்த உபகரணங்கள் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டு மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2008ம் ஆண்டு முதல் 5 மில்லியனுக்கும் அதிகமான தொலைத்தொடர்பு உபகரணங்கள் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அதில் 50% உபகரணங்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் இந்தியாவில் முதல் 5ஜி new radio-ஐ உற்பத்தி செய்த நிறுவனமும் நோக்கியா தான் என்பது குறிப்பிடத்தக்கது. நோக்கியாவின் சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் அனைத்தும் இந்திய ஆப்பரேட்டர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னேற்றும் காண்பதற்கு தொடர்ந்து பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.