25th November 2020

மூக்கைப் பிடித்துக்கொண்டு முங்கி எழும் பக்தர்கள்… நோய் தீர்க்கும் குளம்… நோய்களை உண்டாக்குகிறதா?

மூக்கைப் பிடித்துக்கொண்டு முங்கி எழும் பக்தர்கள்… நோய் தீர்க்கும் குளம்… நோய்களை உண்டாக்குகிறதா?

மூக்கைப் பிடித்துக்கொண்டு முங்கி எழும் பக்தர்கள்... நோய் தீர்க்கும் குளம்... நோய்களை உண்டாக்குகிறதா?

நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் சித்தாமிர்தத் தீர்த்தக் குளத்தில் ஒரு முதியவரின் சடலம் மிதந்து மீட்கப்பட்ட நிலையில் இப்போது, கோயில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்து அந்த ஊரே மூக்கைப் பொத்தும் அளவுக்குத் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. காரணம் குளத்தில் செத்து மிதந்த சடலமா… இல்லை, குளத்தைச் சுத்திகரிப்பதற்குப் போடப்பட்ட நூறு கிலோ சுண்ணாம்பா என்று கோயில் நிர்வாகமும் பக்தர்களும் குழம்பியுள்ளனர்.

தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான வைத்தீஸ்வரன் கோயிலின் சித்தாமிர்தக் குளம் மிகவும் பழைமை வாய்ந்தது. இதில் குளித்தால் சகல நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடந்த மே 23-ம் தேதி மதியம் 3 மணி அளவில் பக்தர் ஒருவரின் உடைகள் படியோரம் கிடந்தன. இதனால், குளிப்பதற்காகக் குளத்தில் இறங்கியவர் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல் துறையினருக்கும், மீட்புப் படையினரும் தேடுதல் பணியைத் தொடங்கினர். அன்று இருட்டும் வரை சடலம் கிடைக்கவில்லை. இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன. அச்சப்பட்டது போலவே நீரில் மூழ்கியிருந்த முதியவரின் உடல், மறுநாள் காலை உப்பி மிதக்கத் தொடங்கியது. தொடர்ந்து, காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது ஒருபுறம் இருக்க… மே மாதம் 25-ம் தேதி, கோயிலில் உழவாரப் பணிகள் நடைபெற்றன. அப்போது கோயில் குளத்தில் சுண்ணாம்பை கொட்டினால், சடலத்தால் குளத்தில் உருவான கிருமிகளும் குளத்திலிருக்கும் அழுக்கும் சுத்தமாகும் என்று சிலர் கூறியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து குளத்தில் நூறு கிலோ சுண்ணாம்பு கொட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், உழவாரப் பணிகள் முடிந்த சில மணி நேரத்தில் குளத்தின் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியது. அடுத்தடுத்த நிமிடங்களில் மீன்கள் அனைத்தும் செத்து மிதக்கத் தொடங்கின. கடும் துர்நாற்றம் பரவியது. ஆனால், கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இரு நாள்கள் இப்படியே கடந்தன. அதற்குள் ஊர் முழுவதும் துர்நாற்றம் பரவியது. ஒருவழியாக மே 27-ம் தேதி காலை குளத்தில் செத்து மிதந்த மீன்களை அகற்றியது கோயில் நிர்வாகம். ஆனாலும், நீரை மாற்றாததால், துர்நாற்றம் தொடர்கிறது.

இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோயில் ஆலய நிர்வாகத்தினரிடம் பேசினோம். “நீரில் சுண்ணாம்பைக் கலந்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. உழவாரப் பணியின்போது குளத்தில் தூய்மைப் பணிகள் மட்டுமே செய்யப்பட்டன. மீட்புத் துறையினர் குளத்தில் இறங்கி சடலத்தைத் தேடும்போது, நீர் குழம்பியதால் மீன்கள் அனைத்தும் மேலே வந்தன. அப்போது அதிக வெயிலின் காரணமாக மேலே வந்த மீன்கள் இறந்தன” என்கின்றனர்.

ஆனால், பக்தர்களோ, “கோயில் நிர்வாகத்தின் இந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், மதியம் 3 மணிக்கு மேல்தான் முதியவர் காணவில்லை என்கிற தகவல் வந்தது. மாலை 4 மணிக்கு மேல்தான் மீட்புப் பணிகள் நடந்தன. அந்த நேரத்தில் அவ்வளவாக வெயில் இல்லை. சரி… மறுநாள் காலை சடலம் எடுக்கும்போது வெயில் அடித்தது என்றே வைத்துக் கொள்வோம். அப்போது நீர் கலங்கியதால் மேலே வந்த மீன்களுக்குத் திரும்பவும் கீழே நீருக்குள் செல்லத் தெரியாதா… யார் காதில் பூ சுற்றுகிறார்கள்?” என்று கேட்கிறார்கள் உஷ்ணமாக!

இப்போதும் அருகில்கூட செல்ல முடியாதபடி துர்நாற்றம் வீசுகிறது கோயில் குளம். அதில்தான் பக்தர்கள் வேறுவழி இல்லாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு முங்கி எழு வேண்டியிருக்கிறது. நோய் தீர்க்கும் என்று நம்பப்படும் குளம், நோய்த்தொற்றை ஏற்படுத்திக் கொண்டிருப்பது வேதனையிலும் வேதனை. குளத்தைச் சுத்தம்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை.

செய்தி : ஸ்ரீ ஹரீஷ்

Leave a Reply