7 பேரை குற்றவாளிகளாகத்தான் பார்க்க வேண்டும்: அண்ணாமலை


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை குற்றவாளியாகத்தான் பார்க்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளாக பார்க்க வேண்டும் எனவும், அவர்களை உணர்வுப்பூர்வமாகப் பார்க்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தமிழர்கள், இந்துக்கள், தேசியம் ஆகியவற்றிக்கு திமுகவினர் எதிரானவர்கள் எனக் கூறிய அவர், பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதே தவிர அதிலுள்ள நிர்வாகிகளுடன் அல்ல என்றும் கூறினார்.
சசிகலா என்பவர் தனி மனிதர் எனவும், அவர் சிறை சென்று வெளியே வந்துள்ளார், தனி மனிதருக்கு உண்டான அனைத்து உரிமைகளும் சசிகலாவுக்கு உண்டு என்றும் கூறிய அண்ணாமலை, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீஸார் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர், சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காக போலீசார் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்றும் பாராட்டு தெரிவித்தார்.