கடலூர், விழுப்புரத்தை அடுத்து நாகையிலும் பி.எம் கிசான் முறைகேடு


பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகளுக்கு தலா ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க திட்டமிட்டது மத்திய அரசு. இந்த தொகையை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் வேளாண்மைத்துறை மூலம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் இந்த திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதால் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களில் மட்டும் ஐந்து லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த முறைகேடு சம்பந்தமாக விழுப்புரம், கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டுக்கு உதவிய 34 அரசு அலுவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்த ஊழியர்கள் 81 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாகை மாவட்டத்திலும் இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நாகை மாவட்டத்தில் 59 ஆயிரம் விவாசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயனடைந்துள்ளனர். இதில் முதற்கட்டமாக 9 ஆயிரம் விவசாயிகளின் விவரங்களை ஆய்வு செய்த வேளாண்மை துறை அதிகாரிகள், 3 ஆயிரம் பேர் தகுதியில்லாதவர்கள் என கண்டறிந்துள்ளனர். இதையடுத்து அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பயன் அடைந்தவர்கள் பட்டியலைக் கொண்டு வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.