திடீர் திருப்பம்.. புதிய கட்சி.. ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு..!!


நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க போவதில்லை மற்றும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த பிறகும் அமைதியாக இருந்து வந்த அர்ஜுன் மூர்த்தி தற்போது புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
என் உயிரினும் மேலான தமிழக மக்களே, எனது சொந்தத்தின் சொந்தங்களே, அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், வணக்கங்கள்!
நமது சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் என்னை நமது நாட்டிற்கு அறிமுகம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நமது தலைவருக்கு உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் காரணமாக அவர் அரசியலில் ஈடுபட முடியாமல் போனதும் நாம் அறிந்த ஒன்று. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் வேதனை அடைந்தேன்.
இதற்கு ஈடு செய்யும் வகையில் நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நீண்ட கால அரசியல் மாற்றத்தின் நினைவானது நிச்சயமாக நிகழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து, நமது தமிழகத்தின் அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்போது? என்று சொல்லிய சூப்பர் ஸ்டார் அவர்களின் நல்ல எண்ணம், நல்ல மனது, நம் தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள்.
தற்போது நமது தலைவர் ஒரு நடிகராக, அவரது தொழில் தர்மத்தின் காரணமாக, அவரது பெயருக்கும், புகழுக்கும், களங்கம் வரக்கூடாது என்ற காரணத்தால் அவரது பெயர், புகைப்படங்களை பயன் படுத்த வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். எனவே, என்னை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பி நாட்டிற்கு அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டூ வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன்.
எந்த சூழ்நிலையிலும் எனக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். அரசியலில் இல்லை என்றாலும் எனக்கு தலைவர் என்பதையும் தாண்டி நானும் ஒரு ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன். அந்த அக்கறையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கெட்ட பெயரை நாம் ஏற்படுத்த மாட்டோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஆசிர்வாதம் மட்டுமே போதும். அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று தான் தொடங்கும் புதிய கட்சி குறித்து அர்ஜுன் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, புதிய சித்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சி தொடங்க இருக்கிறேன். எனது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் பாஜகவுக்கு மாற்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி ரசிகர்கள் என் கட்சியில் இணைந்து பணியாற்றலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.