பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி கருத்து


மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : லக்னோ சிறப்பு நீதிமன்றத்தின் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், இந்திய மத நல்லிணக்கத்திற்கு விடப்பட்ட சவாலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அன்று அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.அந்த வழக்கில் முன்னாள் உள்துறை அமைச்சரும் துணை பிரதமருமான எல் கே அத்வானி ,மனிதவள மேம்பாட்டு துறை முன்னாள் அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்ட 48 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையானது லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 26 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இன்றைக்கு இந்த வழக்கின் தீர்ப்பு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை காலத்திலே குற்றம்சாட்டப்பட்டவர்களில் 16 பேர் இறந்து விட்டார்கள். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தப்பி இருப்பது சிபிஐயின் நண்பகத்தன்மையை பாதித்துள்ளது. லக்னோ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு விந்தையாக உள்ளது.
குறிப்பாக தீர்ப்பில் நீதிபதி , அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மசூதியை இடிக்க முற்பட்டதை தடுக்க முயன்றதாக சொல்லியிருப்பதும், மசூதியை முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என சொல்லி இருப்பதும் நீதித்துறையின் மேலுள்ள நம்பகத்தன்மையை சந்தேகப்படும் படியாக உள்ளது. மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணை என்றாலே சரியான முறையில் இருக்கும், நிச்சயமாக தண்டனை வாங்கித் தருவார்கள் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு தகர்த்துள்ளது. வழக்குகளில் ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருந்தால் தப்பித்து விடுவார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது. இந்த வழக்கில் அரசாங்கம் மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்தால் தான் நீதியின்பால் நீதித்துறை பாலும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும். குறிப்பாக பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.