ராஜஸ்தான் மாநிலத்தில், பட்டாசு விற்பனைக்கும், வெடிக்கவும் தடை விதிப்பு


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தடை விதித்துள்ளார். கொரோனா பரவலுக்கு இடையே மக்கள் தீபாவளி கொண்டாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர், இந்த சவால் மிகுந்த நேரத்தில் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்திற்கு மிக முக்கியம் என்று கூறினார். எனவே, மாநிலத்தில் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், முறையான சான்றிதழ் இல்லாமல் இயங்கும் , சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் .இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் . மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக மாநிலத்தில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை செய்வதற்கான முடிவை மாநில அரசு எடுத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.