முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் விசாரணை


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்திலுள்ள இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவசர கட்டுப்பாட்டு எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், நெடுஞ்சாலை நகரிலுள்ள முதலமைச்சரின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
இதனையடுத்து, முதலமைச்சரின் இல்லத்துக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் இன்று மாலை சேலத்தில் உள்ள இல்லத்துக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.