நாகப்பட்டினத்தில் அமையவுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு மத்திய அரசு அனுமதி


2 ஆயிரம் கோடி முதலீட்டில் நாகப்பட்டினத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் பகுதியில் தற்போது அமைந்துள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் ஆண்டிற்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அகற்றிவிட்டு புதிதாக 9 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புத் கூட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது.இத்திட்டத்திற்கான 613.87 ஏக்கர் நிலத்தினை கையகப்படுத்துவதற்கு தமிழ்நாடு தொழிலியல் நோக்கத்திற்கான நில எடுப்பு சட்டம் 1997 நிர்வாக அனுமதியானது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வழங்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தின்படி இந்த சுத்திகரிப்பு ஆலை அமையவுள்ள இடத்தை சுற்றியுள்ள கிராமங்களில் 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மற்றும் சுகாதார கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.கச்சா எண்ணெய் குழாய்களில் ஏற்படும் கசிவுகளை கண்டறியும் அதி நவீன SCADA தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். கடற்கரையோரம் குழாய் அமைக்கின்ற பணிகளால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படாத வகையில் விரைந்து முடிக்கப்படும்.
ஆலை கட்டுமானத்தின்போது தகுதி வாய்ந்த உள்ளூர் வாசிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்தை கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி பரிசீலித்திருந்த மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.