கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின், அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கூட்டுறவு சங்கங்களில் தற்காலிகமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை அரசு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார்.
இந்த உத்தரவு, வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல், வழக்கு தொடராத தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும், இதேபோன்ற தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
Source: News18 tamil