பொதுப்பணித்துறையில் நடைபெறும் ரூ.4,000 கோடி திட்டப்பணிகளை ஜனவரிக்குள் முடிக்க வேண்டும்- அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவு


பொதுப்பணித்துறையில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் நடைபெறும் பல்வேறு திட்டபணிகளை அதிகாரிகள் ஜனவரிக்குள் முடிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு மூலம் ரூ.1.500 கோடி செலவில் ராமநாதபுரம், கிருஷ்ணகிரி உட்பட 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டுமான பணிகள் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வருகிறது. அதே போன்று புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி மாவட்டங்களில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்படுகிறது. அதே போன்று, தேனி வீரபாண்டி உட்பட 2 இடங்களில் கால்நடை மருத்துவக்கல்லூரி, கோவை, திருச்சியில் ரூ.140 கோடியில் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. எனவே, 11 மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டியுள்ளது. எனவே, கட்டுமான பணிகளை வேகப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று, கால்நடைக்கல்லூரி, தொழில்நுட்ப பூங்கா, வணிகவரி, சார்பதிவாளர் அலுவலகம், கால்நடை மருந்தகம், பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம், கழிவறை உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் மற்றும் நீர்வளப்பிரிவு சார்பில் முக்கொம்பு கதவணை, காவிரி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் கதவணை அமைக்கும் பணி, குடிமராமத்து திட்டம் மூலம் 1500, நீர்வளநிலவள திட்டத்தின் மூலம் 1600 ஏரிகள் புனரமைக்கும் பணி உட்பட அனைத்து பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு இப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை ஜனவரிக்குள் முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இப்பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு செய்யவும் முதன்மை தலைமை பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதன்பேரில், மாநிலம் முழுவதும் நடந்து வரும் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு திட்டப்பணிகளை முதன்மை தலைமை பொறியாளர்கள் ராஜா மோகன், ராமமூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்டமாக ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து அடுத்த கட்டமாக திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வு தொடர்பாக அறிக்கையாக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசனிடம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.