`15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!’ கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்

குறைந்த பட்ஜெட்டில், சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பயணம் செய்ய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர் இந்த மாணவர்கள்.

“பணக்காரர்கள் மட்டுமல்ல; நடுத்தரவர்க்கத்தினரும் காரில் போகணும்னு ஆசைப்பட்டோம். அதற்காக நாங்க உருவாக்குனதுதான் இந்த `ஹைப்ரிட் கார்’. இதோட வடிவமைப்புச் செலவு வெறும் 50,000 ரூபாய் மட்டும்தான். இருவர் 80 கி.மீ வரை பயணம் செய்ய 15 ரூபாய், அதாவது 1 கி.மீ தூரத்துக்கு வெறும் 30 பைசா செலவில் செல்லலாம்.” என்கின்றனர் அரவிந்த்குமார், பாலாஜி, ராஜ்குமார், வினித், அசோக்குமார் , ரவிராகுல், தளபதி பிரபாகரன், கிருபாநிதி, நாகேந்திரன், நந்தகுமார், விஸ்வநாதன், முகமது சித்திக் ஆகிய 12 பேரும். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் இவர்கள். இவர்களின் உழைப்புதான் ஹைப்ரிட் கார்.

ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு பொறியியல் கல்லூரியில் இம்மாதிரியான ஒரு காரை மாணவர்கள் தயாரித்தாலும் அது பொதுமக்கள் பயன்படுத்தும் சந்தைக்கு வராமல் கல்லூரியின் ஏதோ ஒரு மூலையில் காட்சிப் பொருளாக மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இது அப்படி இருக்காது என்கின்றனர் இந்த மாணவர்கள். குறைந்த செலவில் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் சூரிய மின்சக்தி மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஹைபிரிட் காரின் ஸ்பெஷாலிட்டி குறித்து மாணவர்களிடமே கேட்டோம்.

காரை வடிவமைத்த குழுவில் உள்ள மாணவர் நாகேந்திரன் உற்சாகக் குரலில் பேசத்தொடங்கினார். “ஒரு கார் குறைந்தது மூன்று லட்ச ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயருது. இப்படி இருந்தா நடுத்தர வர்க்கத்தினருக்கு கார் வாங்குறது வெறும் கனவாகவே போயிடுமா என யோசித்தோம். அதான் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் சூரிய மின்சக்தி மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் காரை 50,000 ரூபாய்க்கு வடிவமைத்தோம்.” என்றார்.

மேலும், “சொசைட்டி ஆப் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் என்ற அமைப்பை அடிப்படையாகக் கொண்டு சாலையின் தன்மைக்கு ஏற்ப விரைவாகச் செல்லும் வகையில் இதன் உருவத்தை வடிவமைத்துள்ளோம். காரின் அனைத்துப் பக்கங்களிலும் வெயிட் பேலன்ஸிங் சரியாக இருப்பதால் எந்த ஒரு சூழலிலும் கார் கவிழாமல் இருக்கும்.” என்று நம்பிக்கை கொடுத்தார் நாகேந்திரன்.

எல்லா காரிலும் இருப்பது போல் பேட்டரி இண்டிகேஷன் சிஸ்டம், ஸ்பீடோமீட்டர் எல்லாம் கொண்ட சோலார் காரில், முன்பக்கம் இரு சக்கரங்களும் ஸ்டியரிங் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பி.எல்.டி.சி வகை மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் எந்தவகை பேட்டரி காரிலும் இல்லாதது போன்ற மின்சாரம் வீணாவதைத் தடுக்கும் பொருட்டு மோட்டாரை காரின் பின் சக்கரங்களில் பொருத்தியுள்ளனர். திடீரென மோட்டாரில் ஒன்று பழுதானால் மற்றொன்று உடனடியாகப் பயன்படுத்தும் வகையில் அமைத்திருப்பது காரின் ஹைலைட். மூன்று நபர்கள் வரை பயணம் செய்யக்கூடிய ஹைபிரிட் கார் குறைந்தபட்சம் 200 முதல் 250 கிலோ வரை இழுக்கும் திறன் வாய்ந்த ஹைபிரிட் காரின் மொத்த எடை 50 கிலோ மட்டுமே. ஒரு முறை பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் வரை, 40 கிலோ மீட்டர் வேகத்தில் தடையின்றி பயணிக்க முடியும் என்கிறார்கள் மாணவர்கள். இதற்கு ஆகும் செலவு 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 30 பைசா.

“தற்போது காற்று மாசுபாட்டில் முதல் மாநிலமாக டெல்லி உள்ளது. நாம் பயன்படுத்தும் வாகனங்களின் பெருக்கத்தினால் ஒவ்வொரு மாநிலத்திலும் அசுரவேகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு வளர்ந்து வருகிறது இதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் எட்டாக்கனியாக உள்ள சொந்த கார் கனவை பூர்த்தி செய்யும் எண்ணத்திலும்தான் இந்த காரை வடிவமைத்து இருக்கிறோம்.” என்று பெருமிதம் கொள்கிறார் மாணவர் குழுவிலுள்ள தளபதி பிரபாகரன்.

காரை ஆன் செய்ததும், இண்டிகேஷன் காட்டும். காரில் ஆக்சிலேட்டர், பிரேக்ன்னு ரெண்டு பெடல்கள்தான். ஆக்சிலேட்டரை காலால் அமுக்கினால் `ரோட்டார் பொசிஷன் சென்சார்’ மூலம் பின்சக்கரங்களில் பொருத்தியுள்ள மோட்டார் செயல்படத் தொடங்கி கார் நகரத்தொடங்கும். 4 எலக்ட்ரிக் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் ஹைப்ரிட் காரை சார்ஜ் செய்வதற்கு எட்டு மணிநேரம் தேவைப்படும். எட்டு மணிநேரம் கரன்ட் மூலம் சார்ஜ் செய்து பயன்படுத்தும் இந்த கார் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது சார்ஜ் குறைந்து 30 சதவிகிதத்திற்குக் கீழ் வந்தால் உடனடியாக காரின் மேற்கூரையில் இருக்கும் சோலார் பேனலிலிருந்து சூரிய மின்சக்தி மூலம் பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி ஹைப்ரிட் காரின் சிறப்பு.

12 பேர் கொண்ட மாணவர்கள் குழுவிற்கு வழிகாட்டிய துறைத்தலைவர் முனைவர் ரவி “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு திறமை ஒளிந்துகொண்டு இருக்கத்தான் செய்யும். அதைச் சரியாக கண்டுணர்ந்து அவர்களின் ஆர்வம் மற்றும் திறமைகளின் அடிப்படையில் வழிகாட்டினால் சமூகத்திற்குப் பயனுள்ள நல்ல கண்டுபிடிப்புகள் பலவற்றை உருவாக்கமுடியும் என்பதற்கான சான்றுதான் இந்த ஹைப்ரிட் கார்” என்றார்.
சுற்றுப்புறச் சூழலை காக்கும் தலையாய கடமை கொண்ட சமுதாயத்தில் இருக்கும் நாம், இம்மாதிரியான சூழலுக்கு மாசற்ற கண்டுபிடிப்புகள் பலவற்றை உருவாக்கி, ஊக்கப்படுத்தவேண்டும்.

செய்தி : ஸ்ரீ ஹரீஷ்

Leave a Reply