கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கூடுதலாக சிகிச்சை மையங்கள் ! – பிரவீன் பி.நாயர்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கூடுதலாக கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட உள்ளதாக மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தும் அலுவலரும் நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவின் பீ.நாயர் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை,சீர்காழி,பூம்புகார் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கல்வி நிறுவனங்களில் உள்ள காப்பறைகளில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவின் பீ .நாயர் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள காப்பறைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் கூறியது : காப்பறைகளில் சிசிடிவி பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது . மேலும் அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர் .

அரசு அலுவலகங்களில் முகக்கவசம் அணியாத அலுவலர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை,நகராட்சி,பேரூராட்சி,காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை கண்காணித்து அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க உத்தரவிட்டுளோம்.மேலும்,சமூக இடைவெளியை கடைபிடிக்காத திருமண மண்டபம்,திரை அரங்கங்கள் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கப்படும்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்,மாவட்டத்தில் கூடுதலாக கொரோனா சிகிச்சை மையங்கள் அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதோடு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.உடன்,மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.முருகதாஸ்,தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜெ.பாலாஜி (மயிலாடுதுறை),வாசுதேவன் (பூம்புகார்) வட்டாச்சியர் பி.பிரான்சுவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

You cannot copy content of this page