27th February 2021

தீயாய் பற்றுகிறது தீபா, தீபக் – சசிகலா சந்திப்பு விவகாரம்!

சிறையிலிருந்து வெளியே வந்து, தன்னுடைய அடுத்த அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கும் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி வி.கே.சசிகலாவை, யார் யார் சந்திக்கிறார்கள், யார் யார் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதுதான் தமிழக காவல்துறை உளவுத்துறைக்கான உச்சபட்ச அசைன்மென்ட் ஆக இருக்கிறது. உளவுத்துறை மட்டுமில்லை; உடன் பிறப்புகளுக்கும், ரத்தத்தின் ரத்தங்களுக்கும்கூட இப்போதைக்கு இதைத் தெரிந்து கொள்வதுதான் அதிகபட்ச ஆவலாகவும் இருக்கிறது.

நேற்று வரையிலும், சசிகலாவை அதிமுகவின் எந்த விஐபியும் நேரடியாகச் சந்திக்கவில்லை என்பதுதான் நிஜ நிலவரம். ஆனால் எத்தனை பேர் அலைபேசியில் அளவளாவுகிறார்கள், தூதர்களை அனுப்பி நலம் விசாரிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அடுத்த மாதம் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த மாதம் முழுவதும் தமிழக அரசின் அனைத்துத்துறைகளிலும் அப்பாயின்ட்மென்ட் அறுவடை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. குடும்பத்தினர், உற்றார், உறவினர்களுக்கு பணி நியமன உத்தரவுகளைப் பெறுவதற்காக எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என எல்லோரும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சசிகலாவைச் சந்தித்து, தேவையின்றி தங்களுக்கு இழப்புகளை ஏற்படுத்திக்கொள்ள யாரும் தயாராக இல்லை என்பதும் புரிகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு, தற்போதுள்ள அதிமுக அரசு காபந்து அரசாக நீட்டிக்கும்போதே, கட்சியிலிருந்து பலரும் கம்பி நீட்டி விடுவார்கள், அதற்குப் பின்பே சசிகலாவைப் பார்க்க ஒவ்வொருவராக வருவார்கள் என்று அமமுகவினர் நம்பிக்கையோடு பேசிக்கொண்டிருக்கின்றனர். அவரால் கட்சியில் அடையாளம் பெற்றவர்கள் உட்பட கட்சிக்காரர்கள் யாரும் சசிகலாவைப் பார்ப்பதற்கு இப்போது தயாராக இல்லை என்ற நிலையில், அவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவருடைய சகோதரர் தீபக் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சந்தித்து வெகுநேரம் பேசியதாக தகவல் வெளியானது. போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு அரசு தரப்பில் தீபா, தீபக்கை அணுகியது குறித்தும், நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்துகள் கிடைக்காமல் தமிழக அரசு தடுப்பதாக சசிகலாவிடம் அவர்கள் புலம்பியதாகவும் தகவல்கள் பரவின.

அப்போது அவர் சொன்ன ஆலோசனைகளை ஏற்று, பிப்ரவரி 11 அன்று, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தின் முன்பாக தீபாவும் தீபக்கும் சேர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் போகிறார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேற்று அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. இதனால் தீபாவும் தீபக்கும் சசிகலாவைச் சந்தித்ததாகக் கூறப்படுவதே, திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்த்தகவல் என்று அதிமுக தரப்பில் சந்தேகம் கிளப்பப்படுகிறது. உண்மையில் இருவரும் சசிகலாவைச் சந்தித்தார்களா அல்லது சந்தித்துவிட்டு, பின்னர் யாருடைய மிரட்டலுக்காவது பயந்து, பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுத்து விட்டார்களா என்ற கேள்விகளுடன் இருவரிடமும் பேசுவதற்கு பெருமுயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், இருவருமே நேற்று வரையிலும் பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்குத் தயாரான மனநிலையில் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரியவந்தது. இதனால், அவர்களில் இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தோம். தீபா தரப்பில் யாரும் பேசத்தயாராக இல்லாத நிலையில், சசிகலாவுடனான சந்திப்பு குறித்து வெளியான தகவல்கள் குறித்து தீபக் தரப்பில் விளக்கம் பெற்று நம்மிடம் சில தகவல்களை அவர்கள் பகிர்ந்தனர்…

‘‘சசிகலாவை தீபாவும், தீபக்கும் சந்தித்ததாகக் கூறுவது திட்டமிட்டு பரப்பப்படும் பொய். அவர்கள் தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வரவும் இல்லை. அப்படியே வந்தாலும் அவரைப் போய்ப் பார்ப்பதா வேண்டாமா என்பது பற்றி இருவரும் எந்த முடிவும் எடுக்கவும் இல்லை. அப்படியிருக்கையில், இருவரும் சந்தித்து பல மணி நேரம் பேசினார்கள் என்ற தகவல் எப்படிப் பரவியது என்று அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர். தற்போதுள்ள தமிழக அரசின் நடவடிக்கைகளில் இருவருக்குமே கடும் அதிருப்தி இருக்கிறது என்பது உண்மைதான். ஜெயலலிதாவுக்கு இவர்களிருவரைத் தவிர, வேறு யாரும் வாரிசுதாரர்கள் இல்லை என்பது சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுவிட்டது.

‘ஆனால் அரசு அதை ஏற்காமல் மேல் முறையீடு சென்றதோடு, வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி விட்டது. எத்தனை ஆண்டுகளானாலும் சட்டப்பூர்வமாக அந்த சொத்து, இவர்களிருவருக்கும்தான் வந்து சேரும். அந்த நம்பிக்கை அவர்களுக்கு நிறையவே இருக்கிறது. அதிமுக தலைமையைப் பொருத்தவரை, போயஸ் கார்டன் இல்லம், தீபாவுக்கும் தீபக்கிற்கும் சென்றுவிட்டால், அவர்களை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, சசிகலா அங்கே குடியேறிவிடுவார். அந்த வீட்டில் அவர் குடியேறினால் தங்களுக்கு பலவிதங்களிலும் சிக்கல்கள் உருவாகும்; தொண்டர்கள் மத்தியிலும் சசிகலாவுக்கு ஒரு இமேஜை உருவாக்கி விடுமென்று கருதுவதால்தான் அவசர அவசரமாக அதை அரசுடைமையாக்கியிருக்கின்றனர். உண்மையில் அதிமுக தலைமை நினைப்பதைப் போல, தீபாவும், தீபக்கும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இல்லை.

சசிகலாவுடன் இவர்களிருவருக்கும் நல்ல தொடர்பும் நல்லுறவும் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தவறான தகவல் தரப்பட்டிருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை இவர்களிருவரையும் அவரிடம் நெருங்கவிடாமல் தடுத்ததே சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர்தான் என்ற கோபம்தான் தீபாவுக்கும் தீபக்கிற்கும் அதிகமாக இருக்கிறது. மிகவும் கஷ்டமாக காலகட்டங்களில் ஜெயலலிதா உதவுவதற்குத் தயாராக இருந்தும்கூட, அவற்றை சசிகலா அண்ட் கோ தடுத்து நிறுத்தியதையும் இருவரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பும் கூட, இவர்களிருவருக்கும் சில கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அத்தனைக்கும் காரணம் சசிகலாதான் என்பதை அவர்கள் மறக்கவில்லை. அதனால் அவரிடம் இவர்களிருவரும் இனிமேல் இணக்கமாகச் செல்வதற்கு வாய்ப்பு இல்லை; அதற்கான தேவையும் இப்போது அவர்களுக்கு இல்லை.!’’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

Source: https://www.minnambalam.com/politics/2021/02/12/10/Is-Sasikal-deepa-jayakumar-meeting-false-news-%3F

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts