பிற மாநில கார்டுதாரர்கள் ரேஷன் வாங்குவதில் சிரமம்


தமிழக ரேஷன் கடைகளில், ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ், பிற மாநிலங்களை சேர்ந்த கார்டுதாரர்கள், உணவு பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மத்திய அரசு, இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக, ஒரே ரேஷன் கார்டு என்ற, திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், எந்த மாநில கார்டுதாரரும், எந்த மாநில ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்.தமிழகத்தில், ஒரே ரேஷன் கார்டு திட்டம், அக்., 1ல் அமல்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் உள்ள, ‘பயோமெட்ரிக்’ எனப்படும், கைரேகை கருவியில், பிற மாநில கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்து, பொருட்கள் வழங்கப்பட்டன.
அவர்களிடம், கிலோ அரிசிக்கு, 3 ரூபாயும்; கோதுமைக்கு, 2 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.தமிழக கார்டுதாரர்களுக்கும், கைரேகை பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு கைரேகை பதிவாக வில்லை என்றாலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள, ரேஷன் கார்டு, ‘ஸ்கேன்’ செய்வது உள்ளிட்ட அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டன.தொழில்நுட்ப பிரச்னையால், தமிழக கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்வதில், அதிக நேரம் ஏற்பட்டது. இதனால், கைரேகை பதிவு சேவை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தமிழக கார்டுதாரர்களுக்கு, பழைய முறைப்படி தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படுகின்றன. கைரேகை பதிவு மீண்டும் துவக்கப்படாததால், பிற மாநில கார்டுதாரர்களால் பொருட்கள் வாங்க முடியவில்லை.