தினகரன், அதிமுக இணைப்பு பற்றி பேசுவது விநோதமானது- ஓ.எஸ்.மணியன்


“இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக செயல்பட்ட டி.டி.வி. தினகரன், அதிமுக இணைப்பு பற்றி பேசுவது வினோதமாக இருக்கிறது” என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகையை அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் செயல்பட்டுவந்த அரசு நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப விழாவை ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்ற டி.டி.வி. தினகரன், அதிமுக இணைப்பு பற்றி பேசுவது வினோதமாக இருக்கிறது.
18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தன்னோடு அழைத்துச் சென்று அதிமுகவை ஆட்சியில் இருந்து இறக்குவதற்கு, இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி வேலை பார்த்தவர் தினகரன். சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டும் அதிமுகவினர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியில்தான் இன்றுவரை இருந்து வருகிறார்” என்று தெரிவித்தார்.
Source: Nakkheeran