வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு !


வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு :
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்,வாக்குப் பெட்டி காப்பறை அமைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும்,அலுவலரும்,நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி.நாயர்,மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லதா ஆகியோர் புதன் கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் பி.நாயர் கூறியது: நாகை,மயிலாடுதுறை மாவட்டங்களுக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,861 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த வாக்குச் சாவடிகளுக்கு செல்லவேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களில் மார்ச் 28,29-ம் தேதிகளில் வேட்பாளர் புகைப் படத்துடன் கூடிய சின்னம் பொருத்தப்பட்டது.அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து தொகுதிகளிலும் பாதுகாப்பு அறைகளில் ஆயுதம் இந்திய காவல் துறையினர் மூலம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக 1050-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக 350 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் 1,861 வாக்குச்சாவடிகள் உள்ளன.இதில் 114 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.இதில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு ஏப்.3- ஆம் தேதி 3- ஆம் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.5 -ஆம் தேதி வாக்குச்சாவடி அலுவலர் பணியாற்றுவதற்கான ஆணைகள் வழங்கப்படும்.
1861 வாக்குச்சாவடிகளுக்கு 156 மண்டல அலுவலர்களைக் கொண்டு, சராசரியாக ஒரு மண்டலத்திற்கு 15 வாக்குச்சாவடிகள் என்ற வீதத்தில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
8900 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.இதில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை தபால் வாக்குகள் பெற்றுள்ளனர்.காவல் துறையை சேர்த்த 1,100 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பம் படிவம் வழங்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய சேவை வழங்கும் தபால்துறை, ரயில்வே துறை, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு அவர்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள்,மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்கும் வசதியின் கீழ் 3,873 நபர்கள் தனிவிருப்பதின் பேரில் தபால் வாக்கு செலுத்தும் நடைமுறை நடைபெற்று வருகிறது.வெள்ளிக் கிழமையுடன் (ஏப்.2) 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்,மாற்றுத்திறனாளிகள் தனிவிருப்பதின் பேரில் தபால் வாக்கு செலுத்தும் நடைமுறை நிறைவடையும்.ஏவிசி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணிகள் 95சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார்.
ஆய்வின்போது,மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.முருகதாஸ், மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ.பாலாஜி, மயிலாடுதுறை வட்டாச்சியர் பி.பிரான்சுவா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன்,டிஎஸ்பி கே.அண்ணாதுரை, டிஎஸ்பி (பயிற்சி) ஜனனி பிரியா, மனோஜ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.