வேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்


வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு வேளாண்துறை சார்ந்த மூன்று மசோதாக்களை பார்லி., கூட்டத்தொடரில் நிறைவேற்றியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. மேலும், இந்த சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளை ‛கருப்பு ஞாயிறு’ என விவசாயிகள் சங்கங்கள் அழைக்கின்றன.
இந்நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு செப்டம்பர் 25ம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனை தொடர்ந்து, தமிழக விவசாயிகள் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் சாலை மறியல் போராட்டத்தை நடத்த முடிவு செய்து அறிவித்திருந்தனர். இந்நிலையில் வேளாண் மசோதாவை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சிகளில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தினர். திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டம், சாலை மறியல் நடந்தது.சென்னை தாம்பரத்தில் நடக்கும் விவசாய சங்க ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். வண்ணாரப்பேட்டையில் தமிழக விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் போராட்டம் நடக்கிறது. வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் தொடர்பாக #BharatBandh, #NoToFarmBills போன்ற ஹேஸ்டேக்குகள் டுவிட்டரில் இந்திய அளவில் டிரண்டாகியுள்ளது.
SOURCE