இடுபொருள் மானியத்தில் குளறுபடி; கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


இடுபொருள் மானியத்தில் குளறுபடி கண்டித்து மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
இடுபொருள் மானியம் வழங்கியதில்ஏற்பட்ட குளறுபடியை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் பிருந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுப்பு அமைத்திருந்தனர்.
இதனால் குவிண்டால் நெல் முட்டை ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு பயிர் காப்பீட்டு தொகையாக ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டும். பெய்த மழையளவை வைத்து காப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் முழக்கமிட்டனர். இறுதியில் கலெக்டர் லலிதாவிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்குஅளித்த பேட்டி: தினந்தோறும் அம்மா வழியை பின்பற்றுவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மையானால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று குவிண்டாலுக்கு ரூ.2500 என விலை நிர்ணயம் வேண்டும். ஏற்கனவே இடுபொருள் மானியம் வழங்கியதில் 20 சதவீதம், 30 சதவீதம் என விவசாயிகளுக்கு அளித்து அதிகாரிகள் குளறுபடி செய்துள்ளனர். அதே போன்று பயிர் காப்பீடு இழப்பில் குளறுபடி செய்யாமல் முழு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றார்.