’நிவர்’ புயலால், மயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் சாலையில் வேருடன் சாய்ந்தது


மயிலாடுதுறை பகுதியில் ‘நிவர்’ புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் சீனிவாசபுரம் பகுதியில் திருவாரூர் சாலையின் ஓரத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் ஒன்று வேருடன் சாய்ந்து விழுந்தது.மேலும் இந்த புளிய மரத்தின் கிளைகள் முறிந்து அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் விழுந்தது. இதன் காரணமாக டிரான்ஸ்பார்மர் சேதம் அடைந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மின்சார வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேற்று அதிகாலை முதல் புளியமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு திருவாரூர் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் சாலையில் நேற்று காலை 8 மணி வரை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
மேலும் காலை 10.30 மணி வரை டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது நீக்கும் பணி நடந்தன. அதன் பின்னர் மயிலாடுதுறை நகரில் மின் வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 12 மணி அளவில் புறநகர் பகுதிக்கும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.
புயல் காரணமாக நேற்று முன்தினம் மதியம் பஸ் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. புயல் கரையை கடந்ததால் நேற்று நண்பகல் 12 மணிக்கு மேல் படிப்படியாக ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் மயிலாடுதுறை பகுதி படிப்படியாக சகஜ நிலைக்கு திரும்பியது.