கொடைக்கானல்: வெள்ளிநீர் அருவி பகுதியில் இ-பாஸ் வழங்கக் கோரிக்கை


கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிநீர் அருவி பகுதியில் இ-பாஸ் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களிலுள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடங்களான பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகியவற்றை மட்டும் பார்ப்பதற்கு புதன்கிழமை முதல் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த இடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நுழைவுக் கட்டணம் செலுத்தி இந்த இடங்களைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கொடைக்கானல் வருவதற்கு இ-பாஸ் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் சரியாக இ-பாஸ் கிடைக்கவில்லை எனவும், எனவே, கொடைக்கானல் வெள்ளிநீர் வீழ்ச்சியில் இ-பாஸ் வழங்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.