லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்


நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வுக்கு வருகிறது.
அதீத வாராக் கடன் உள்ளிட்ட பிரச்னைகளை தொடர்ந்து லட்சுமி விலாஸ் வங்கி பண பரிமாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 25,000 ரூபாய் மட்டும் எடுக்கலாம் என்றும் டிசம்பர் 16-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடு தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், லட்சுமி விலாஸ் வங்கியுடன் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிபிஎஸ் வங்கியை இணைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது.
இதன்மூலம், லட்சுமி விலாஸ் வங்கிக் கிளைகள் அனைத்தும் இன்று முதல் டிபிஎஸ் வங்கியின் கிளைகளாக செயல்பட உள்ளன. லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்களாக மாற்றப்படுவதால், வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடும் முடிவுக்கு வந்துள்ளது.