பி.இ. இறுதி செமஸ்டர் தேர்வுக்கு ஆன்லைன் வழியில் பதிவு செய்வதில் சிக்கல்: மாணவர்கள் அவதி


கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன தமிழகத்தில் ஏழு பல்கலைக்கழகங்கள் நேரடி தேர்வையும் ஆறு பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வழி தேர்வையும் நடத்த உள்ளன. சில பல்கலைக்கழகங்கள் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. ஏப்ரல் மே மாதம் தேர்வுக்கு விண்ணப்பித்த அரியர் மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இறுதியாண்டு தேர்வுகள் 15ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வை பெரும்பாலான பல்கலைக்கழகங்களும் அவற்றின் இணைப்பு கல்லுாரிகளும் ஆன்லைனில் நடத்த உள்ளன.
அண்ணா பல்கலை, மதுரை காமராஜ், கோவை பாரதியார், காரைக்குடி அழகப்பா, கோவை வேளாண் பல்கலை மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலை போன்றவை ஆன்லைன் வழியில் தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளன. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பி.இ. இறுதி செமஸ்டர் தேர்வுக்கு ஆன்லைன் வழியில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இணையதள பிரச்சனையால் பதிவு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். தற்போது தேர்வு கட்டணங்களை வசூலிப்பதில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் ஹால் டிக்கெட், மாதிரி தேர்வு குறித்த விவரங்களை அண்ணா பல்கலை. வெளியிடாததால் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.