தென்கிழக்கு அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த பகுதி…வானிலை மையம் தகவல்


தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து தமிழகத்தின் பரவலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. அயனாவரம், எழும்பூர், கிண்டி, மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, ஆலந்தூர், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 5.7 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின்னர் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதனால் கேரளா மற்றும் உள் கர்நாடகாவிற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
Source: Polimer News