மகா சிவராத்திரி : வியாழக்கிழமையில் மகாசிவராத்திரி விரதம் இருந்தால் என்னென்ன சிறப்புகள் தெரியுமா


வியாழக்கிழமை குருவுக்கு உகந்த தினம். இந்த நாளில் மகாசிவராத்திரி விரதம் இருந்து ஞானகுருவான சிவபெருமானை அபிஷேகம் செய்து வணங்கினால் ஏழேழு ஜென்மங்களில் ஏற்பட்ட பாவங்கள் விலகும் என்று ஆன்மீக குருமார்கள் கூறியுள்ளனர்.
அன்னை பார்வதிக்கு உகந்தது நவராத்திரி ஒன்பது நாட்கள் திருவிழா கோலகலமாக கொண்டாடப்படும். சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. மாசி மாதம் மகா சிவராத்திரி பண்டிகை சிவ ஆலயங்களில் நான்கு கால பூஜைகளுடன் விடிய விடிய அபிஷேகம், ஆராதனைகள் என களைகட்டும்.
இந்த ஆண்டு மாசி மகாசிவராத்திரி விழா வரும் 11ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பகிறது. நாடு முழுவதும் அனைத்து சிவ ஆலயங்களிலும் நான்கு கால பூஜைகள் நடைபெறும். நாளை வியாழக்கிழமை அதிகாலையில் திறக்கப்படும் கோவில் நடை மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் அடைக்கப்படாது என பல ஆலயங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையில் சிவனை வழிபடுவது சிறப்பு. அதுவும் மகாசிவராத்திரி நாள் வியாழக்கிழமை வருவதால் ஞானகுருவாக போற்றப்படும் சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட்டால் பலவித யோகங்களும் கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினை விலகும். நோய் நொடிகள் நீங்கும்.
சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு பால், தயிர், திரவியப் பொடி, அரிசிமாவு, தேன், விபூதி, சந்தனம், நெல்லிப்பொடி முதலான அபிஷேகப் பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம். சிவனை அலங்கரிக்க வில்வம், செவ்வரளி, மல்லி, முல்லை முதலான மலர்களை வாங்கிக் கொடுக்கலாம். மனதில் நிம்மதியும் குடும்பத்தில் சந்தோஷமும் அதிகரிக்கும்.
சிவ ஆலயத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் பூஜைகளை தரிசனம் செய்தால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். நமச்சிவாய மந்திரத்தை நாள்முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கலாம். விடிய விடிய கண்விழித்து அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்பவர்களுக்கு கர்மவினைகள் நீங்கும். எதுவுமே வாங்கித்தர வசதியில்லையே என்று ஏங்க வேண்டாம். வில்வம் வாங்கிக் கொடுங்கள் பல பிறவிக்கும் புண்ணியம் கிடைக்கும்.