செய்தியாளர் படுகொலைக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தமிழக அரசுக்கு கடும் கண்டனம்


மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர். இராம. சேயோன் தமிழக அரசுக்கு விடுத்திருக்கும் கண்டன அறிக்கையில் :
தமிழன் தொலைக்காட்சியை சேர்ந்த மோசஸ் என்ற செய்தியாளர் சென்னை குன்றத்தூர் அருகே நடைபெறும் சமூக விரோத செயல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால் பல முறை மிரட்டப்பட்டுள்ளார். காவல்நிலையத்தில் அது குறித்து அவர் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் இல்லாத காரணத்தினால், சமூக விரோத சக்திகள் அவரை படுகொலை செய்து விட்டார்கள். பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை தமிழகத்தில் என்பதற்கு மோசஸ் படுகொலை ஒரு உதாரணமாகும். சமூகவிரோத செயல்களை அம்பலப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உயிருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கைத் துறைக்கு பத்திரிக்கையாளர்கள் தான் முதுகெலும்பு. அப்படிப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு இந்த அடிமை ஆட்சியில் பாதுகாப்பு இல்லை . சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். சுதந்திரமாக அவர்கள் செயல்பட முடியாதவாறு தமிழக அரசு அவர்களுக்கு பல ஊறுகளை விளைவிக்கிறது. பத்திரிக்கையாளர் மோசஸ் படுகொலையில் ஈடுபட்ட சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அந்த கொடூரத்தை நிகழ்த்திவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசும் தமிழக காவல்துறையும் வழங்க வேண்டும். தொடர்ந்து தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் ஒரு வாடிக்கையாக நடந்தேறி வருகிறது. அதை தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. உடனடியாக பத்திரிக்கையாளர் மோசஸ் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்தவர்களை சட்டத்தின் பிடியில் நிறுத்தி அவர்களுக்கு உரிய விசாரணையை உடனடியாக கொண்டு வந்து அவர்களுக்கு உரிய தண்டனையை தமிழக அரசும் தமிழக காவல்துறையும் பெற்றுத்தர வேண்டும். பத்திரிக்கையாளர் மோசஸ் படுகொலைக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மோசஸ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பத்திரிகையாளர் மோசஸ் படுகொலை செய்தி கேட்டவுடன் உடனடியாக கண்டன அறிக்கை விடுத்து மோசஸ் குடும்பத்திற்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்த உயிரினும் மேலான கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் பத்திரிக்கையாளர்களை பாதுகாப்பதிலும் ஜனநாயகத்தை பாதுகாப்பதிலும் முன்னுதாரணமாக திகழும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். பத்திரிக்கையாளர்களுக்கு தமிழகத்தில் உரிய பாதுகாப்பை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் .