மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கோரிக்கை


மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கனவான மயிலாடுதுறையை தலைநகராக கொண்ட புதிய மாவட்டம் தற்போது நனவாகியுள்ளது.
ஆனால் மாவட்ட கனவை விட நீண்ட நாள் கனவான புதிய பேருந்து நிலையம் நாளது தேதி வரை கானல் நீராகத்தான் உள்ளது.
1960-களில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் தொடங்கப்பட்ட பேருந்து நிலையம் 60 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்படவில்லை. 2005- 2006இல் புதிய பேருந்து நிலையம் அமைக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏவிசி கல்யாண மண்டபம் எதிர்புறம் அடிக்கல் நாட்டப்பட்டு எந்தவித பணியும் தொடங்காமல் தற்போது
அடிக்கல்நாட்டு விழாவில் வைக்கப்பட்ட கல்வெட்டும் காணாமல் போய்விட்டது.
அதன்பின்பு 2011 – 2016ல் மயிலாடுதுறை நகர்மன்றத்தால் மயிலாடுதுறை தாலுக்கா மன்னார்குடி அருகே கருங்குயில் நாதன் பேட்டையில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடம் புதிய பேருந்து நிலையமாக தேர்வு செய்யப்பட்டு அது இன்றுவரை ஏட்டளவிலேயே உள்ளது. மயிலாடுதுறைக்கு மாவட்டம் அறிவித்த தமிழக அரசு இன்று வரை புதிய பேருந்து நிலையம் அமைக்க அறிவிக்காதது விந்தையாக உள்ளது.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் மயிலாடுதுறை. மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. மகாத்மா காந்தி வந்து இறங்கிய ரயில்வே சந்திப்பு தான் மயிலாடுதுறை சந்திப்பு .
அப்படி பெருமைமிக்க மயிலாடுதுறை நகருக்கு இன்றுவரை புதிய பேருந்து நிலையம் இல்லை. மயிலாடுதுறையின் புதிய மாவட்ட எல்லைகள் நிர்ணயிக்கப்படும் இந்த வேலையிலே புதிய பேருந்து நிலையம் என்பது காலத்தின் கட்டாயம். மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால கனவு ஆகும்.
ஆளும் கட்சியோ மயிலாடுதுறைக்கு புதிய பேருந்து நிலையம் தேவை என்பதையே மறந்து விட்டார்கள். மயிலாடுதுறைக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க நாகை மாவட்ட ஆட்சியர் பீரவின் நாயர் அவர்களும், மயிலாடுதுறை மாவட்ட தனி அதிகாரி லலிதா அவர்களும் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி மாவட்ட தொடக்க விழாவில் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையமும் தொடங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.