மயிலாடுதுறை அருகே கூலித்தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி


மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு வையாபுரிதிடல் பகுதியைச் சேர்ந்தவர் யோகநாதன். இவர், தாயகம் திரும்பிய இலங்கை தமிழர் ஆவார். கூலித் தொழிலாளியான யோகநாதனுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உண்டு .
அதில், இளையமகள் பிரியதர்ஷினி. மணல்மேடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து பொதுத் தேர்வில் 468 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். அதோடு நீட்தேர்வில் 128 மதிப்பெண்கள் பெற்று அரசுப்பள்ளி மாணவர்கள் தரவரிசை பட்டியலில் 494 வது இடத்தையும் பிடித்துள்ளார்.
ஏழ்மை காரணமாக எந்த பயிற்சி வகுப்பிற்கும் சென்று பிரியதர்ஷினி படிக்கவில்லை. வீட்டிலேயே படித்து நீட்தேர்வு எழுதியுள்ளார். கல்விச் சேனல்களும் பிரியதர்ஷினிக்கு உதவியாக இருந்துள்ளன.
வகுப்பாசிரியர் சரிதா நீட் தேர்வு எழுத ஊக்கமளித்து உதவிகரமாக இருந்துள்ளார் பிரியதர்ஷினியின் தந்தையால், அவருக்கு ஒரு செல்போன் கூட வாங்கித் தர இயலவில்லை.இதனால், நீட் தேர்வு
விண்ணப்பங்களில் கூட தன் வகுப்பாசிரியை சரிதாவின் செல்போன் எண்ணைதான் பிரியதர்ஷினி கொடுத்துள்ளார்.
இத்தகைய வறுமை நிலையிலும் விடாமுயற்சியால் நீட் தேர்வில் வெற்றிபெற்று சாதித்துள்ளார் பிரியதர்ஷினி. தற்போது தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரியதரிஷினி, தனக்கும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
பிரியதர்ஷினி மட்டுமல்ல அவரின் ஆசிரியைகள், மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருமே பிரியதர்ஷினியை மருத்துவராக்கிப் பார்க்கும் ஆசையில் உள்ளனர்.