மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் மறைவட்ட முதன்மைகுரு பங்குத்தந்தை பேரருட்திரு.ஆரோக்கியதாஸ் அடிகளார் தலைமையில் கொடி பவனி நடைபெற்றது. உதவி பங்குத்தந்தை அருட்திரு.கஸ்மீர்ராஜ் வழிநடத்தினார். ஆதிச்சபுரம் பங்குத்தந்தை அருட்திரு.மரியசூசை அடிகளார் புனித சவேரியார் திருஉருவக்கொடியை புனிதம் செய்தார். வாணவேடிக்கை முழங்க, இன்னிசை இசைக்க, ஆலய வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. “துணிவோடு இருங்கள் நான்தான் அஞ்சாதீர்கள்” என்ற சிந்தனையை மையமாக வைத்து நடைபெற்ற திருப்பலியில், உலக அமைதிக்காகவும், கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
விழாவின் தொடக்க நாள் வழிபாட்டு நிகழ்வுகளை புனித மரியாயின் மாசற்ற இருதய சபை கன்னியர்கள், புனித பவுல் தொடக்கப்பள்ளி, மற்றும் புனித பவுல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் பங்கு மக்களோடு இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர்.
கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆண்டு திருவிழா பத்து நாட்கள் நடைபெற உள்ளது. தினசரி மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி இரவு, திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து தேர்பவனியும் நடைபெற உள்ளது.
டிசம்பர் 3ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.