மயிலாடுதுறையில் மக்களை மிரட்டும் பாதாள சாக்கடை திட்டம்: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?


மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கிய போது மகிழ்ச்சியடைந்த மக்கள் தற்போது நகரின் பல்வேறு இடங்களில் ஏற்படும் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு, அதனால் ஏற்படும் மிகப்பெரிய பள்ளங்கள், சாலைகளில் ஓடும் கழிவுநீரால் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுநோய் பரவும் ஆபத்து,போக்குவரத்து நெரிசல், துர்நாற்றம் வீசும் அவலம் போன்ற பிரச்சனைகளால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நாளுக்கு நாள் மக்களை பாடாய்படுத்தி வரும் பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு பணிகளை உடனடியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் காவிரி ஆறு மற்றும் பழங்காவிரியில் பொதுமக்களால் சாக்கடை நீர் விடப்பட்டு வந்த நிலையில் இதற்கு தீர்வுகாண வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து (1996 – 2001) திமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு நிதி ரூ.42 கோடி திட்ட மதிப்பீட்டில் மயிலாடுதுறைபாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு 2003 – ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்பார்வையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் நடைபெற்ற மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடக்கத்திலேயே பல்வேறு சர்ச்சைக்கு உள்ளானது. ஆரம்ப கட்ட பணிகளில் உள்ள குறைபாடுகளை களைய பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. 2006-ஆம் ஆண்டு பணிகள் முடிவடைந்து நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இத்திட்டத்தில் 2009 – ஆம் ஆண்டு முதலே ஆள்நுழைவு தொட்டிகளில் இருந்து கழிவு நீர்வெளியேறுவது, தொட்டிகள் இடிந்து விழுவது, கழிவு நீர் குழாயில் அடைப்பு மற்றும் உடைப்புகள் ஏற்படுவது என பல்வேறு பிரச்சனைகள் தொடங்கியது.இதனால் பாதாள சாக்கடை திட்டத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் மற்றும் ஆள்நுழைவு தொட்டிகள் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என 2009 – ஆம் ஆண்டு பொதுநல அமைப்புகள் சார்பில் மயிலாடுதுறை சார் ஆட்சியர் அஜய் யாதவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மயிலாடுதுறை பாதாள சாக்கடைத் திட்டம் 2012 – ஆம் ஆண்டு வரை குடிநீர் வடிகால் வாரியமும், 2012 – ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தனியார் பராமரிப்பிலும் செயல்பட்டுக் கொண்டு உள்ளது. 3406 ஆள் நுழைவு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. 8 கழிவு நீரேற்று நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 68 கி.மீ தூரத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு மயிலாடுதுறையை அடுத்துள்ள ஆறுபாதி கிராமத்தில் 32 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்டு புல் வளர்க்கவும், விவசாயத்திற்குபயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் சத்யவான் வாய்க்காலில் விடப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் ஏற்பட்ட பள்ளங்கள் ஒரு புறமிருக்க, நகர் முழுவதும் உள்ள ஆள் நுழைவுத் தொட்டி மூடிகள் உடைந்தும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும் கழிவு நீர் வெளியேறி வரும் அவலமும் நீடித்து வருகிறது.
மயிலாடுதுறை நகர் சாலைகளில் இதுவரை பத்து முறை பாதாள சாக்கடை குழாய்களின் உடைப்பால் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யவே படாதபாடு பட்டுவந்த அதிகாரிகளுக்கு சவாலாக கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி தரங்கை சாலையில் உள்ள கொத்தத்தெரு பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு சாலை உள்வாங்கி உள்ளது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்று நாளுக்கு நாள் பாதாள சாக்கடையால் ஆங்காங்கே ஏற்படும் தொடர் பாதிப்புகளால் மயிலாடுதுறை பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். பாதாள சாக்கடைத்திட்ட பராமரிப்பு பணிகளை முறையாக செய்ய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுத்தபாடில்லை.
பாதாள சாக்கடை குழாய்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட அந்தந்தப்பகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.