27th November 2020

“தமிழக அரசின் நல்லாசிரியர் விருது” மகுடம் சூடி ஊருக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்கள்

கல்வித்துறையில் பள்ளியின் கல்வித்தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் வாழ்க்கையைச் செழுமைப் படுத்துதல், ஆசிரியப் பணியை கொண்டாடுதல் உள்ளிட்ட நோக்கங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதினை வழங்கி கவுரவித்து வருகிறது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி இந்த ஆண்டு 377 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் 165 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், 165 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 32 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், 2 ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள், 3 மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 377 ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் நாகை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக அரசு ஆறு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டியுள்ளது.

நாகை மாவட்டம், சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வரும் அசோக்கின் கல்வி பணிகளை பாராட்டி கல்வித்துறை நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டியுள்ளது. 1945–ஆம் ஆண்டு நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்து கொண்டு கர்நாடக மாநிலம் அலிபுரம் சிறையில் சிறைதண்டனை அனுபவித்த சுதந்திர போராட்ட தியாகி எம்.எஸ்.பி.திலகர்–சௌந்தரவல்லி இவர்களுக்கு மகனாக பிறந்த நல்லாசிரியர் அசோக் 15.10.1997 முதல் அரசு பணியில் இணைந்து தகட்டூர், ஆயக்காரன்புலம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

சமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு தமிழ் பாடநூல் குழு ஆசிரியராகவும், மெல்லக் கற்போருக்கான +2 தமிழ் பாடத்தில் கருத்தாளாரக மாநில அளவில் பணியாற்றியுள்ளார். அரசு பொதுத்தேர்வுக்கான +2 தமிழ் வினாத்தாள் தயாரிப்பு மற்றும் அரசுத்துறை தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியிலும் ஒருவராக இருந்துள்ளார். இவருடைய தந்தை பெயரில் ஆண்டுதோறும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கி மாணவர்களின் கல்வி ஆர்வத்தை ஊக்கப்படுத்தி வருகிறார்.

நாகை மற்றும் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் அதிக ஆதிதிராவிடர் மாணவர்களை சேர்த்ததற்கான கல்வி மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள இவர் மாணவர்களைக் கொண்டு சுனாமி நிவாரண நிதி, குஜராத் நிவாரண நிதி சேகரித்து வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

பன்னாட்டு லயன்ஸ் சங்கம், ஜேசீஸ் சங்கம் உள்ளிட்ட சேவை அமைப்புகள் தன்னார்வ அமைப்புகள் இவருடைய பணியினை பாராட்டி எழில்மிகு ஆசான், சொல்லின் வித்தகர், அப்துல் கலாம் விருது போன்ற விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது. இந்நிலையில் இவருடைய மகத்தான பணிகளை பாராட்டி தமிழக அரசும் நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டியுள்ளது. விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ந.குமார். இவருடைய சிறப்பு மிக்க பணிகளை பாராட்டி தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

15.11.1989 முதல் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், நாகப்பட்டினம், கெடார், பு.முட்லூர், சிதம்பரம், கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பள்ளிகளில் முதுகலை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

சேவை சங்கங்களின் உதவியுடன் நாங்கூர் பள்ளியில் மேல்நிலை மாணவர்களுக்கு தனியாக கழிவறை அமைத்து, பெண்கள் கழிவறைக்கு மின் எரியூட்டியும் அமைத்துள்ளார். கல்வித்திறனில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளும், ஆற்றுப்படுத்துதல் பயிற்சிகளும், மாணவர்களின் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்த புத்தாக்க பயிற்சிகளும் தொடர்ந்து அளித்து வருகிறார்.

பள்ளியின் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக சென்னை ஆனந்தம் இளைஞர் நல அமைப்பு மூலம் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் கணினி ஆய்வகம் அமைத்து 22 கணினிகள் பள்ளிக்கு பெற்றுள்ளார். இதைப்போல பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் மூலம் உதவிகள் பெற்று பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

பாடத்திட்டம் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளான நாட்டு நலப்பணித்திட்டம், விவசாய பிரிவு மாணவர்கள் கள ஆய்வு, மாணவர்களை உயர் கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து சென்று அங்குள்ள நூலகம், ஆய்வகங்களை பார்வையிட வைத்தது, பள்ளியில் புதிதாக தேசிய மாணவர் படை துவக்கியது போன்ற எண்ணற்ற பணிகளை தனித்துவத்துடன் செய்துள்ளார்.

தலைமையாசிரியர் குமாரின் பணிகளைப் பாராட்டி ஜேசீஸ் சங்கம் கல்விச்சேவை விருதும், சிறப்பு தலைமை ஆசிரியருக்கான விருதும் வழங்கி கௌரவித்துள்ளது. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற இலக்கோடு ஆசிரியர் பணியை சிறப்பாக ஆற்றி நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ள இவரை ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

தில்லையாடி அருகே உள்ள பெருங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் பிரபாகருக்கும் தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. 29 ஆண்டுகளாக கல்விப் பணியாற்றி வரும் இவர் 6 ஆண்டுகள் அன்னப்பன்பேட்டை உதவி தொடக்கப் பள்ளியிலும், 12 ஆண்டுகள் சின்னங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் பணியாற்றியுள்ளார். 2008-ஆம் ஆண்டு முதல் பெருங்குடி பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

மாநில அளவில் பாடநூல் ஆசிரியர் குழுவில் தேர்வு செய்யப்பட்டு முதலாம் வகுப்பு பாட நூல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு பாடநூலில் வடிவமைப்பிற்கும், தரத்திற்கும் பெரிதும் காரணமாக இருந்த ஆசிரியர் பிரபாகரை கல்வித்துறை ஏற்கெனவே பாராட்டியுள்ளது இவருடைய பணிக்கு கிடைத்த சிறப்பு. மாணவர்களை முழு ஈடுபாட்டுடன் அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்க செய்து புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கி பரிசுகள் பெற வைத்தது, ஆசிரியர் பயிற்றுநராக இருந்து செம்பனார்கோவில் ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி அளித்தல் போன்ற பணிகளையும் சிறப்பாக செய்துள்ளார்.

மேலும், இவருடைய முயற்சியால் பெருங்குடி பள்ளி வளாகத்தில் மரம் வளர்த்து பசுமை, பாதுகாப்பு, தூய்மை பேணப்பட்டு வருகிறது. சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்ட சின்னங்குடி கடற்கரை கிராமத்தில் உள்ள மாணவர்களை ஆற்றுப்படுத்துதல் பணியினை சிறப்பாக மேற்கொண்ட இவர் பெருங்குடி கிராமத்தில் தடைப்பெற்று நிலுவையிலிருந்த பிள்ளையார் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு உதவி செய்து விழா சிறப்பாக நடைபெற உதவியுள்ளார். பள்ளியில் நடைபெறும் அனைத்து விழாக்கள், தலைவர்களின் பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளை புதுமையாக வழங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர். திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் பங்குபெற்று பரிசுகள் பெற தொடர்ந்து வழிகாட்டி வருகிறார். இத்தகைய சிறப்புமிக்க பணிகளை செய்து நல்லாசிரியர் விருது பெற்றுள்ள ஆசிரியர் பிரபாகரை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தரங்கம்பாடி அரசு உதவி பெறும் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை குழந்தை தெரஸ்ஸின் கல்வி பணிகளை பாராட்டி தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி உள்ளது. தரங்கம்பாடியை சார்ந்த ஏசுதாசன் – எலிசபெத் இவர்களின் மகளான பட்டதாரி ஆசிரியர் குழந்தை தெரஸ் 05.12.1996 முதல் கல்விப் பணியில் இணைந்து பணிபுரிந்து வருகிறார்.

மாணவிகளின் இல்லத்திற்கு சென்று பெற்றோர்களை சந்தித்து கல்வியின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும் பற்றி உணர்த்தியதன் மூலம் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதோடு மாணவர்களின் இடைநிற்றல் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது இவருடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றி. 2014-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து முறை பத்தாம் வகுப்பு தேர்வில் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100% சதவிகித தேர்ச்சியை பள்ளிக்கு பெற்றுத் தந்துள்ளார். பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டிற்காக தேவையின் போது பல்வேறு உதவிகளை செய்துள்ள இவர் ஆசிரியர்கள் அறையில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியை அமைப்பதற்காக ரூபாய் 1 லட்சம் நிதி கொடுத்துள்ளார்.

2006-ஆம் ஆண்டு லயன்ஸ் சங்கம் வழங்கிய ஞானகுரு விருது பெற்றுள்ளார். பட்டதாரி ஆசிரியர் என்ற நிலையை கடந்து ஓவியம், நுண்கலை, உடற்கல்வி போன்ற துறைகளிலும் கைதேர்ந்த ஆசிரியராக வலம் வந்து மாணவிகளின் முன்மாதிரி ஆசிரியராக போற்றப்படுகிறார் ஆசிரியை குழந்தை தெரஸ்.

கல்விப்பணிக்காகவே தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்து சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்று சாதனை படைத்துள்ள ஆசிரியரை பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள், மாணவிகள் பாராட்னர்.

சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் துணை முதல்வராக பணியாற்றி வரும் சரோஜாவுக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டியுள்ளது.

கடந்த 21 ஆண்டுகளாக சீர்காழி விவேகானந்தா பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை சரோஜா முதுகலை ஆசிரியர் என்ற நிலையை கடந்து தன்னுடைய கடின உழைப்பால் தற்போது பள்ளியின் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். 1998-ஆம் ஆண்டு பள்ளியில் சேர்ந்த இவர் 1999-ஆம் ஆண்டே பள்ளியின் துணை முதல்வரானார். அது முதல் மேல்நிலை அரசு பொதுத்தேர்வில் 100% சதவிகித விழுக்காடு தேர்ச்சியை வணிகவியல், கணக்குப்பதிவியல் பாடங்களில் பெற்றுத் தந்துள்ளார்.

மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4 முறை மாநில அளவிலும், 8 முறை மாவட்ட அளவிலும் சாதனை படைக்க வழிவகுத்து பணியாற்றியுள்ளார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தன்னுடைய கணவர் தாமோதரன் துணையோடு தன்னுடைய இரண்டு மகன்களின் வாழ்த்துக்களோடு சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

தற்போது தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ள சீர்காழி விவேகானந்தா பள்ளியின் துணை முதல்வர் சரோஜாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்வி நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன், பள்ளி நிறுவனர் குழந்தைவேலு, செயலாளர் அனிதா, செம்பனார்கோவில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினர் பாரதி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராமன், பள்ளி முதல்வர், ஜோஸ்வா பிரபாகரசிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருது பெற்ற ஆசிரியரை பாராட்டிய தருணம் அவருடைய கடின உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

காவிரிபூம்பட்டினம் (மீனவர்) அரசினர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் அன்பழகனுக்கும் தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டியுள்ளது. கல்விப் பணியில் 33 வருடங்களாக பணியாற்றி வரும் இவர், 16 ஆண்டுகள் அன்னப்பன்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து திருநகரி, நிம்மேலி நெப்பத்தூர், காத்திருப்பு, வானகிரி போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் திறம்பட பணியாற்றியுள்ளார்.

மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்த புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். மாணவர்களுக்கு இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பு மூலம் ஆர்வமுடன் கல்வி பயில தேவையான ஏற்பாடுகளை தன்னுடைய முயற்சியால் செய்துள்ளார். கல்வி மட்டுமின்றி மாணவர்களுக்கு கராத்தே, சிலம்பம், நடனம், கணினி பயிற்சி போன்ற நுண்கலை பயிற்சிகள் மூலம் கல்வி ஆர்வத்தைமேம்படுத்தியுள்ளார்.

இவருடைய அயராத கடின உழைப்பால் மாவட்ட அளவில் நடுநிலைப்பள்ளிக்கான தூய்மை பாரதம் விருதும், காமராஜர் விருதும் கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி தினமலர் மற்றும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி சார்பில் வழங்கப்பட்ட டி.வி.ஆர். சிறப்பாசிரியர் விருதும், லயன்ஸ் சங்கம் சார்பில் நெறி மிகு ஆசான் விருதும், சென்னை தென்னிந்திய சமூக கலாச்சார அகடாமி வழங்கிய கல்வி கலை வித்தகர் விருது போன்ற பல விருதுகள் இவருக்கு மணி மகுடம் சூட்டியுள்ளது.

பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பூம்புகார் கிராம பொதுமக்கள் சார்பாக ரூபாய் 20 லட்சமும், அவ்வை தொண்டு நிறுவனம் மற்றும் அப்பகுதி மக்கள் சார்பாக ரூபாய் 3 லட்சமும் நிதியுதவி பெற்று பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், மேம்பாட்டு பணிகளையும் செய்துள்ளார். புதுமையான திட்டங்களாலும், தன்னுடைய எளிமையான அணுகுமுறையாலும் திறம்பட பணியாற்றி வரும் நல்லாசிரியர் அன்பழகனின் கல்விப்பணி மீனவக் குழந்தைகளின் நல்வாழ்விற்கு ஓர் கலங்கரை விளக்கு!

ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்ற தாரக மந்திரத்தோடு தனக்கென தனிப்பாதை அமைத்து சிறப்பாக பணியாற்றி விருதுபெற்ற நல்லாசிரியர்களை நாமும் கொண்டாடுவோம். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துவோம்!

செய்தி : குணசீலன் / படங்கள் : யோகேஷ் & யோகுதாஸ்

2 thoughts on ““தமிழக அரசின் நல்லாசிரியர் விருது” மகுடம் சூடி ஊருக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்கள்

Leave a Reply